பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

‘கொல்லாமை’ என்பதைத் துறவறப் பகுதியில் கூறிய ஆசிரியர், நேரம் வாய்த்தபோதெல்லாம் எதிரிகளாகிய பகைவர்களைக் கொல்லுதல் வேண்டும் என்று போர்ப் படையினர்களுக்குக் கூறுகின்றார் என்றால் அந்தந்த வாழ்க்கையில் நிற்பவர்களுக்கேற்ற அறிவுரையினைத் தெளிவுபடுத்துகின்றார் என்பதே பொருளாகும்.

வருகின்ற விருந்தினர்களைப் போற்றி உபசரிக்க வேண்டும் என்னும் பகுதியினை ‘விருந்தோம்பல்’ என்ற பெயரினால் ‘இல்லறம்’ என்ற பெரும் பகுதியில் வைத்துக் காட்டினார். அப் பகுதியினைத் துறவிகளுக்கு அமைத்துக் காட்டுவதில் பயனிருக்க முடியாதன்றோ? இப்படிச் சிறப்பானதாகவும் இன்றியமையாததாகவும் உள்ள பண்பாடுகளை அமைக்க வேண்டிய இடத்தில் அமைத்து அறம் போதித்தல் வள்ளுவனாரின் அருமையான முறையும் திறனுமாகும் .

வெகுளியினை அறவே துறக்க வேண்டுமென்று துறவிகளுக்கு எடுத்துக் கூறவே அதனைத் துறவறப் பகுதியில் வைத்தார். சிறப்பாகத் துறவிகளுக்குக் கூறினார். என்றாலும் உலக வாழ்க்கையில் இருக்கும் அனைவர்க்குமே தேவையானபோது நற்பண்பாடுகளின் சிறந்த முறைகள் பொருந்துவனவாகும் என்பது புரிந்துகொள்ள வேண்டியதாகும்.

கோபம் :

இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்குக் கோபம் என்னும் குணம், பயன்படுகின்ற அளவுக்குத் தேவை என்பதாகும். நமக்கு மீறிப்போகும்படி செய்தல்தான் பெருந்தீங்கு விளைவிப்பதாகும். கோபத்தினை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ஆறுவது சினம்’ என்று பிற்காலத்தில் சொல்லி வைத்தார்கள்.

கோபம் அறவே இருக்கக் கூடாது என்பது இயற்கையாயின், ‘ஆறுவது சினம்’ என்று கூறுவதற்குப் பதிலாக