பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

இயல்பினையும் கொன்று விடுமே யென்று எடுத்துக்காட்டுகின்றார். ‘நகையும் உவகையும் கொல்லும் சினம்’ என்று குறட்பா தொடங்கிறது.

முகமலர்ச்சியும் அகமகிழ்ச்சியும் மிகச் சிறந்த பண்பாடுகள் அல்லவா? அதுவும் அருள் தோய்ந்த முனிவர்களின் முகம் என்றும் மலர்ச்சியாகவே காட்சியளிக்கும் என்பது இயற்கைதான். மனத்தில் நிகழ்வதை உவகை யென்றும், முகத்தில் நிகழ்வதை நகையென்றும் கூறினார்.

இவ்விரண்டு அரிய பண்பாடுகளையும் சினம் கொன்றே விடும். இக் கருத்தில் வெளிப்படையாகத் தெரிகின்ற உண்மை யொன்றுண்டு. அஃதாவது கோபமே குடிகொண்டிருக்கின்றவர்களிடத்தில் நகைத்து மகிழ்தல் என்பது கிஞ்சித்தேனும் இருப்பதற்கு இடமில்லை என்பதாகும்.

நகையினையும், உவகையினையும் கொல்லும் தன்மை வெகுளிக்கு உண்டானபடியால், அத்தகைய வெகுளியை விட வேறு பகை இல்லவே இல்லை என்று கூறிவிட்டார், பகை இருக்கும்போது நகை எங்கிருந்து வரும். அருமையான குறட்பா வொன்று இவ்வுண்மையினை எடுத்துரைக்கின்றது.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

என்று அமைக்கப்பெற்றிருக்கும் குறளடிச் சொற்கள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த உண்மையினைப் புலப்படுத்தி விடுகின்றது. பகையில் உட்பகை, வெளிப்பகை என்று இரண்டு வகைகள் உண்டு. இவ் விரண்டினையும் குறிப்பதற்காக வேண்டியே நகை, உவகை என்று குறிப்பிட்டார் போலும். நகையினைக் கொல்வதைப் புறப்பகை என்றும் உவகையினைக் கொல்வதை உட்பகை யென்றும் கொள்ளுதல் வேண்டும். இவ்விரண்டையும் ஒன்றாக நின்று கெடுப்பது தான் வெகுளி என்பதாகும்.