பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

‘நகுதல்’ என்கின்ற நற்குணம் பாதுகாக்கப்படுதல் வேண்டும் என்கின்ற முன்னறிவிப்பு போன்ற கருத்தினை இக் குறட்பா கூறுகிறது என்றும் கொள்ளலாம். இவ்வாறு பற்பல கோணங்களில் அரிய உலக உண்மைகளைக் கூறி ஆங்காங்கு ‘நகை’ யென்பதன் இன்றியமையாத் தன்மை யினையும் கூறாமல் கூறி வைக்கின்றார் ஆசிரியர்.

பணியாட்கள் :

இரண்டு பணியாட்கள் தங்கள் தங்கள் தலைவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்களாம். ஒருவன் மற்றவனைப் பார்த்து, “உங்கள் ‘எஜமானருக்கு’ அடிக்கடி கோபம் வருமோ?” என்று கேட்டான். அதற்கு மற்றவன் என்னுடைய ‘எஜமானருக்கு’ ஒரு நாளைக்கு இரண்டு தடவை கோபம் வரும்” என்று சொன்னானாம். சொல்லிய பிறகு திருப்பி அவன் நண்பனை நோக்கி, “உன்னுடைய ‘எஜமானருக்கு’ எப்பொழுது கோபம் வரும்?” என்றான்.

அதற்கு இரண்டாவது ஆள், “என் எஜமானருக்கு” ஆண்டுக்கு இரண்டு தடவைதான் கோபம் வரும்.” என்றான். “ஆகா எவ்வளவு நல்லவர் அவர்!” என்று மகிழ்ச்சியடைந்தான். முன்னவன், “என் எஜமானருக்கு” ஆண்டுக்கு இரண்டு தடவைதான் கோபம் வரும்; ஆனால் ஒரு தடவை வந்தால், ஆறு மாதம் இருக்கும்.” என்று சொன்னானாம்.

இப்படிப்பட்ட பிறவிகள் இருந்தாலும் இருக்கலாம். வாழ்க்கையில் மனிதனை இன்பம் நுகரவிடாமல் செய்வது கோபம் என்று கொண்டாலும், உயர்ந்த நற்குணங்களையும் கொல்லுகின்றதே என்று எண்ணி அறியும்போதுதான் நாம் எவ்வளவு தெரிந்து தெளிந்து வாழவேண்டு மென்பது புலனாகின்றது.