பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

பிச்சைக்காரன் :

பிச்சையெடுப்பவனுக்குக் கோபம் வரலாமா? அவனுக்குக் கோபம் வந்தால் என்ன ஆவது? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டால் அதற்குத் தக்க பதிலை ஆசிரியர் தந்து விடுகின்றார்.

யாருக்குக் கோபம் வரவேண்டுமோ, அவர்களுக்கு வந்தால் பொருள் உண்டு. பிச்சைக்ககரனுக்குப் பிச்சை போடுபவர்கள் மீது கோபம் வந்தால் அதைக்கண்டு சிரிக்காமல் நாம் என்ன செய்வோம்? அப்படிப் பிச்சைக்காரர்களுக்கும் கோபம் வருவதுண்டு என்பதை ஆசிரியர் குறிப்பாக நமக்கு உணர்த்துகிறார். நாம் அனுபவத்தில் கண்டு வரும் சில உண்மை நிகழ்ச்சிகளும் உண்டு.

ஒரு வீட்டின் முன் பிச்சைக்காரன் வந்து நின்றான். “பசி எடுக்கிறது. ஏதாவது சாப்பிட இருந்தால் போடுங்கள்' என்று கேட்டான். வாயிற்படியில் நின்ற வீட்டுக்காரர், “அம்மா இல்லை, வேறு எங்கேயாவது போய்ப் பார்” என்று சொன்னார். உடனே பிச்சைக்காரன் அவரைப் பார்த்து, “நான் அம்மாவைக் கேட்கவில்லை! சோறு தானே கேட்டேன்” என்றானாம். இப்படிப் பிச்சைக்காரர் வகைகளைப் பலவாறாகப் பிரிக்கலாம்! வாழ்க்கையின் கீழமையான, இழிவான அடிமை நிலை என்பது பிச்சையெடுப்பதுதான்.

ஒருவன் வாழ்க்கையில் பிச்சையெடுக்கும் நிலைக்கு வருவதற்குக் காரணம் என்ன என்பதையும் ஆசிரியர் நயமாக விளக்குகின்றார். அக் காரணத்தினை நேரிடையாகக் கூறுவதற்குப் பதிலாக மறை பொருளான முறையில் அமைத்து அறவுரை புகல்கின்றார். அங்ஙனம் கூறுகின்ற போது நம்மையறியாதவொரு நகைப்பு நமக்கு ஏற்பட்டே தீரும். பிச்சைக்காரர்களைப் பார்த்துக் கூறுகின்ற புத்திமதி அல்லது வேண்டுகோள் என்று கூறலாம்.