பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

‘இரப்பான் வெகுளாமை வேண்டும்’ என்று குறட்பா ஆரம்பமாகிறது. பிச்சை எடுத்து யாசிப்பவர்களுக்குக் கோபம் வரக்கூடாது என்று சொல்கிறார். யாசிப்பது மிக மிக இழிவான தொழிலேயானாலும் அப்படி யாசிப்பவர்களுக்கும் கோபம் வருவதுண்டாம். யார் மீது? பிச்சை போடுகிறவர்கள் மீது.

பிச்சைக்காரர்களுக்குக் கோபம் வரக்கூடாது என்பதற்குக் காரணம் காட்டுகின்ற ஆசிரியரின் கருத்தில் எவ்வளவு ஆழமான உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன என்பதைச் சிந்திக்கச் சிந்திக்கப் பெரும் வியப்பு ஏற்படுவதுபோல் தோன்றுகிறது.

ஒருவன் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்து விட்டான் என்றால் அதற்கு அவனுடைய வாழ்க்கையில் அவனை அவ்வாறு கெடுத்த கொடிய குணங்களில் முதன்மையாக இருந்த குணம் கோபமே யாகும். கோபம் குடிகொண்டிருக்கும் குடும்பம் மிகமிகத் தாழ்ந்த நிலைக்கு வந்தே தீரும். ஆதலால் ஒருவனைப் பிச்சைக்காரனாகச் செய்ததே கோபம் என்னும் குணந்தான்.

அப்படியிருக்க அவன் இன்னும் இந்தக் கோபத்தினைத் துணையாக வைத்திருப்பானேயானால் அவன் எங்குப் போய்ச் சேருவானோ! கொடிய வறுமையினால் பீடிக்கப் பட்டு நாள் தோறும் பிச்சையெடுக்கின்ற இந்த நிலை இருக்கின்றதே, இதுவே போதுமான சாட்சியாகும் என்று ஆசிரியர் திடப்படுத்திக் கூறிவிடுகிறார்.

கோபம் ஒருவனை என்ன செய்யும் என்பதற்குச் சாட்சி கண்கூடாக ஒருவன் பிச்சையெடுக்கின்றானே அதுவேதான் என்னும் காட்சி நம் கண் முன்னே காட்டப்படுகின்றது. பிச்சையெடுப்பவனுக்கு வருகின்ற கோபத்தினைக் கூர்ந்து கவனித்து அவனைக் கொண்டு உலக அறத்தினை ஆசிரியர் போதிக்கின்றார் என்று நாம் எண்ணி யெண்ணிக்களிப்போமாக.