பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.


“நித்திய தரித்திரம்” என்று சொல்லப்படுகிற வறுமை இருக்கின்றதே, அதுவே போதுமான சாட்சியாக (கரி) இருக்கின்றதே என்பதைக் குறிக்கும் சொற்களாக, நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி என்னும் சொற்கள் அமைந்திருக்கின்றன. கட்டுக்கடங்காத கோபத்தில் பழகிக்கொண்டிருப்பவர்களில் சிற்சில சமயங்களிலேனும் பிச்சைக்காரர்களைச் சிறிது சிந்திப்பார்களாக என்று மட்டும் குறிப்பிட விரும்புகிறோம்.

கொடுமை :

எனவே மிகக்கொடிய குணமான கோபமென்பது அருமையான பண்பாடு எனப்படும் நகை - சிரிப்பு-என்பதையும் கொன்றுவிடும் என்பதைக் கூறுகின்ற நம் ஆசிரியர் எப்போதும் எக்காலத்திலும் நம்முடன் நகைத்துச் சிரித்துக் கொண்டே இருக்கின்றவர்களைப் பார்த்துப் பகைவர்களை விட மோசமானவர்கள் என்று கூறிவிடுகிறார். நகைப் பினைக் கொல்லும் கோபத்தினைக் கொடிய பகைவன் என்று சொன்னார்.

அதுபோலவே ஒரு சிலர் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு நண்பர்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாது சிரித்து மகிழ்ந்து சேர்ந்து பழகிக்கொண்டே இருப்பார்களேயானால் அவர்கள் பகைவர்களைவிடத் தீங்கு செய்பவர்களாவார்கள் என்பது அறியத்தக்கதாகும். இதனை மிக நன்றாக நாம் தெளிந்து உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

நகைச்சுவையின் சிறப்பினைப் பேசும்போது நண்பர்கள் வழியாக எடுத்துக்கூறுதல் ஆசிரியரின் இயல்பு. ஏனெனில் நண்பர்களுடன் கூடி நகைத்து மகிழ்தல் நடைமுறை அனுபவத்தில் என்றென்றும் உள்ள இயல்புதானே. நண்பர்கள் என்பவர்கள் நம்முடன் கூடி மகிழும் அனைவருமே யாவர்