பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

என்று நாம் கணக்கிடுதல் மிகத் தவறு என்பது ஆசிரியரின் அழுத்தமான கருத்தாகும்.

நம்முடன் நெருங்கிச் சேர்ந்து பழகுகின்றவர்களில் நண்பர்கள் சிலரே இருப்பர். ஏனையவர்களெல்லாம் விரும்பத் தகாதவர்களாக இருப்பர். இன்னும் ஆராய்ந்து நன்கு அறிந்தால் பகைவர்களும் கூட நம்முடன் நெருங்கிப் பழகிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆதலால் நண்பர்கள் யாவர் என்பதனைக் கூர்ந்த மதியால் நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும் என்பது குறிப்பான செய்தியாகும்.

சிரிப்பு நண்பர்கள்:

சில நண்பர்கள் நமக்கு எப்போதும் சிரிப்பு உண்டாகுமாறு பேசிப் பழகி நெருங்கி இருந்துகொண்டிருப்பார்கள். நம்மை எப்போதும் மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார்களே அவர்கள் தான் உண்மையான நண்பர்கள் என்று எண்ணி விடாதே என்கிறார் ஆசிரியர். அவர்களின் உள்ளப்பாங்கினையும் அவர்கள் எத்தகைய வகையினர் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டாவா?

தீயவையான எண்ணங்களும், பழக்கங்களும் கொண்ட பலர் சேர்ந்து பழகுதல் உண்டு. நம்மை நகுவித்து நம்மிடம் முடியுமட்டும் கவர்ந்து செல்ல எண்ணிக்கொண்டிருப்பார்கள். நம்முடன் சேர்ந்து எல்லாவற்றிலும் சிரித்து மகிழ்ந்துகொண்டே இருப்பவர்கள் என்று மட்டும் ஆசிரியர் குறித்துக் கூறாமல், நம்மைச் சிரிக்க வைப்பதே ஒரு வேலையாக வைத்துக்கொண்டு உள்ளத்தில் கள்ளங்கபடமாக எண்ணம் வைத்துக்கொண்டு பழகுகிறவர்களை நம் ஆசிரியர் நண்பர்கள் என்று மட்டும் சொல்லி வைக்காமல் நகைவகையராகிய நட்பு என்று தெளிவுபடுத்திக் கூறுகிறார். அத்தகையவர்களை ஒரு வகையினைச் சேர்ந்தவர்கள் என்று நாம் ஒதுக்கிவிடுதல் வேண்டும்.

நகுதல் என்னும் பண்பாடு மிகச் சிறந்த தென்பது உண்மையேயானாலும் அப் பண்பாட்டினைப் பயன்படுத்திப்