பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

பாழாயின செய்யும் தீயர்களுக்கு நாம் இரையாகிவிடலாகாது என்பது ஆசிரியரின் அரிய கொள்கையாகும். அப்படிப்பட்ட நண்பர்கள் போன்றவர்களைத் தீ நட்பினர், கூடா நட்பினர் என்ற பல முறைகளில் அமைத்து நாம் வழி நடத்தல் வேண்டும்.

நண்பர்கள் தங்கள் கடமையினை யுணர்ந்து மற்ற நண்பனுக்கு இன்னல் வாராமல் தடுத்தும் தக்க நேரத்தில் நல்வழிகளை இடித்துரைத்தும் பழகுதல் வேண்டும். அப்படியில்லாமல் தானும் சிரித்து நண்பனையும் சிரிக்கச் செய்து உள்ளத்தில் தூய்மையில்லாமல் பழகுகின்ற நண்பர் களைவிட எண்ணிறந்த பகைவர்களே மேல் என்று கூறி விடுகின்றார். இத்தகைய சூழ்ச்சி நிறைந்த நகைவகையினரான நண்பர்களைவிடப் பகைவரால் பத்தடுத்த கோடியுறும் என்ற சொற்களினால் குறட்பாவினை முடிக்கின்றார்.

அதாவது, நம்மிடம் நகைத்தும் நல்ல முறையில் கடமையாற்றாது நம்மிடம் கவர்ந்து செல்வதற்காகவே பழகும் நண்பர்களைவிட - நண்பர்களால் வருகின்ற பயனைவிட பகைவர்களால் வருகின்றவை பத்துக் கோடி மடங்கு நல்லவையாக இருக்கும் என்பதாகும்.

அளவு கடந்த பகைவர் கூட்டத்தினால்கூட நமக்கு அவ்வளவு கெடுதி ஏற்பட்டு விடாதாம்: இத்தகைய வஞ்சகர்களால் நமக்கு உண்டாகின்ற தீமையினைவிட என்று அவ்வளவு வற்புறுத்திச் சொன்னார்.

பகைவர்கள் நம்மிடம் நெருங்கித் தீமை செய்வதற்குக் காலம் பார்த்திருப்பர். ஆனால் இந்த நகைவகையராகிய நண்பர்கள் துணிந்து எப்போதும் நம்மிடம் நெருங்கிப் பழகித் தீமையினைச் செய்துவிடுவார்களே!

நகைவகைய ராகிய நட்பில் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்