பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

எக்காலத்திற்கும் பொருந்த எல்லா மக்களும் ஒப்ப எல்லாக் கருத்துகளையும் கூறிய பெரும் பேராசிரியர், தத்துவஞானி, உலகியல் புலவர், பொருளாதார நல்லறிஞர் வாழ்க்கைப்பாதை வகுத்த வல்லவர் வள்ளுவரல்லாமல் வேறு யாரே உளர்?

சிறிய அளவில் குறட்பாக்களை அமைத்து மிகப்பெரிய கருத்துகளை அவற்றுள்ளடக்கி உவமான உவமேயங்களைப் பொதிய வைத்து நகைச்சுவையினையும் நயமாகக் கூறிய பொதுமறைத் தந்தை வள்ளுவனாரின் பெருஞ் சிறப்பினை எங்ங்னம் எடுத்துக் கூற இயலும்.

நகைச்சுவையினை நுழையும் வழியாகக் கொண்டு ஏய்த்துத் திரியும் வஞ்சகக் கூட்டத்தினரின் வகைமுறைகளை முன்னர் கண்டோம். ‘நகை வகையர்’ என்றே அவர்களை ஆசிரியர் அமைத்துக் காட்டினார். அவ்வாறே நண்பர்களின் உலகில் மற்றொரு பகுதிக்கு நம்மை ஆசிரியர் கொண்டு சென்று அங்கேயும் நகைத்துப் பழகும் நண்பர் களைக் காட்டி அவர்கள் நம்முடன் நகைத்துப் பழகிச் செய்கின்ற தீங்கினை விளக்குகின்றார்.

வஞ்சகர் :

வஞ்சக நண்பர்கள் போன்றார் நம்மிடம் எப்படி யெப்படியெல்லாம் நடந்து கொள்வர் என்பதை மட்டும் ஆசிரியர் சொல்லிச் செல்லாமல் அப்படிப்பட்ட அவர்களிடம் நாமும் அப்படியே பழகுவது போலக் காட்டி அவர்களைச் சிறுகச்சிறுக ஒதுக்கித் தள்ளிவிட வேண்டுமென்று உலக அனுபவப் பாதையில் நம்மை நடக்கச் செய்து நல்லுரை தருகின்றார்.

நாமும் அப்படிப்பட்டவர்களிடம் சிரித்துப் பேசியே உள்ளத்தினை அவர்கள் அறியவொண்ணாதபடி செய்ய வேண்டுமென்றும் கூறுகின்றார். ‘இராச தந்திரம்’ என்று கூறப்படுகின்ற பெரும் உண்மையினை அழகிய குறட்பா வொன்றில் ஆசிரியர் அமைத்திருக்கின்றார்.