பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மற்றவர்கள் உள்ளத்தில் பகைமை கொண்டு பழகும் போது அவர்களிடம் எவ்வாறு நாம் பழகினால் நமக்குத் தீமை வராதபடி பார்த்துக்கொள்ளலாம் என்பது இங்கு அறியத் தக்க குறிப்பாகும். ‘நகுதல்’ என்னும் பழக்கம் எப்படியெல்லாம் நமக்குப் பயன்படுவதாகின்ற தென்றவுண்மை ஆழ்ந்து சிந்தித்து மகிழ்வதே யன்றோ!

மனத்திற்குள் நம்மை இகழ்ந்து நினைத்துக்கொண்டே வெளிப்புறத்தில் அதை மறைத்து அறியாதபடி நயமான வார்த்தைகளைப் பேசி நம்முடன் பழகுகின்றவர்களும் உண்டு; பல பேர் உண்டு. அவர்கள் தங்களை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் இருப்பதால் நாமும் அதைத் தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளக் கூடாது என்கிறார் ஆசிரியர். பிறகு எப்படித்தான் அவர்களை ஒதுக்குதல் வேண்டும் என்னும் வினா நமது உள்ளத்தில் எழுகின்றது. அதற்கும் வழியொன்று சொல்லித்தருகின்றார்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்ற பகைமைக் குணமே உருவாகி மறைத்துவைத்துப் பழகுபவர்களிடத்தில் நாமும் அவ்வாறே பழகுதல் நேர்மைதானா என்று நினைத்தால் பகைவர்களிடத்தில் அவ்வாறு நடப்பது தான் - நடக்க வேண்டிய முறையாகும் என்று தெளிவுபடுத்திக் கூறுகிறார்.

நாமும் உள்ளத்தில் பகைமை தோன்ற அவர்களை நினைவுபடுத்தி வைத்துக்கொண்டு வெளிக்குமட்டும் சிரித்துப் பேசி, அப் பகைவர்களை அப்படியே கெட்டொழியச் செய்ய வேண்டும் என்னும் உலகியல் முறையினை உணர்த்துகின்றார். இப்படிப்பட்ட நேரங்களில் நாம் நகைத்து-சிரித்துப்-பேசிக் காட்டுவது உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி காரணமாக இருக்க முடியாதுதான்.

அப்படி நடந்துகொள்ளுவதால் பகைவர்களின் உள்ளத்தில் பகைமைக் குணம் அழிந்து மறையும் என்பதே