பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

ஆசிரியர் குறிப்பாகும். ‘மிகச் செய்து தம் எள்ளுவாரை’ என்றொரு குறட்பா தொடங்குகிறது. இத் தொடர் நம்முடன் நண்பர்கள் போலப் பழகும் பகைவர்களைக் குறிப்பதாகும்.

‘மிகச் செய்து’ என்பது பகைமை வெளிப்படாதவாறு மறைத்து வைத்து வெளிக்கு மிகச் சிறந்த நண்பர்கள் போலப் பழகும் தன்மையினைச் சுட்டிக் காட்டி நின்றது. அவ்வாறு காட்டி மனத்திலே நம்மை இழிவாகவும் பகைமை யெண்ணத்துடனும் இருப்பவர்கள் என்பதைத் ‘தம் எள்ளு வாரை’ என்ற சொற்கள் விளக்கிக் காட்டுகின்றன.

இவ்வாறான நண்பர்கள் போன்ற பகைவர்களிடம் நண்பர்களாகவே காட்டிக்கொண்டு வெளிக்குச் சிரித்துப் பழகுதல் வேண்டுமாம். நகச் செய்து நட்பினுள் என்றொரு சொற்றொடர் குறட்பாவில் வருகின்றது.

இக்குறட்பாவில் கடைசியாக ஆசிரியர் சொல்லித் தருகின்ற கருத்து மிகவும் ஆழ்ந்த அறிவியல் உண்மையினைப் புலப்படுத்தி விடுகிறது.

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப் புல்லற் பாற்று

இவ்வாறு வஞ்சக நண்பர்கள் உள்ளத்தில் பகைமை கொண்டிருப்பவர்களாகின்றார்கள். ஆகையால் நாமும் அதிகமாக வெளியில் நண்பர்களாக நகைத்துப் பழகி அப்பகைமைக் குணத்தவர் உள்ளத்திலேயே சாகும்படி செய்து ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

மரணமடையச் செய்தல் வேண்டும் என்ற கருத்தினைத் தான், சாவினைப் புல்லும்படிச் செய்க வென்றமைத்து, அதுவே சாவினைப் புல்லித் தழுவுகின்ற தன்மையினை உண்டாக்கும் என்று சுருக்கமாகக் கூறும் முறையில் ‘சாப் புல்லற் பாற்று’ என்று குறட்பாவின் இறுதிச் சீராகத் தந்து கருத்தினையும் குறட்பாவினையும் முடித்தார்.