பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பகைவர்களை மரணமடையுமாறு செய்ய வேண்டுமென்பது பொருளாகாது; அந்தப் பகைமை யெண்ணம் கெட்டு அவர்களின் வஞ்சகமும் ஒழிந்து அவர்களின் நட்பும் அற்றுப்போகும் என்பது குறிக்கப்பட்டது. இவ்வரிய வெற்றிக்குக் காரணமாக-மூலப் பொருளாக- ‘நகுதல்’ இருந்ததென்பது உய்த்தறிய வேண்டிய தொன்றாம்.

பகை நண்பர் :

பகைவர்களைப் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் நயமாகவும் உட்பொருள் நிறைந்தனவாகவும் கருத்துகளை விளக்குகிறார். இன்று நடைமுறையில் நாம் பேசுகின்ற பேச்சுக்களெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே வள்ளுவர் கூறி வைத்திருப்பவைகளாகவே நமக்குப் புலனாகின்றன. உயர்ந்த கருத்துக்களை வள்ளுவனார் வாயிலாக அறிகின்றோம் என்பது மட்டுமன்று அவைகளை உள்ளத்தில் சிரிப்பும் வியப்பும் தோன்றுகின்ற முறையில் ஆசிரியர் அமைத்து விடுகின்றார்.

நண்பர்களின் வகைகளைப் பலவாறாகப் பிரித்துக் காட்டி, அவர்களில் பகைவர்கள் கணக்கில் வைக்கப்பட வேண்டியவர்கள் எத்தனை வகையினர் - நண்பர்கள் போலவே நம்முடன் பழகி வருகின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்ட ஆசிரியர் மறப்பதேயில்லை.

“ஆளை அப்படியே சாப்பிட்டு விடுவான் போல் இருக்கிறதே! என்று நாம் இன்றைய பேச்சு வழக்கில் காண்கின்றோம். அஃதாவது சில நண்பர்கள் நல்ல பண்பு இல்லா தவர்களாக இருந்தாலும், நம்மிடத்தில் மிகப் பெரிய அன்பு வைத்திருப்பவர்கள் போல என்னென்னவோ பேசி நம்மை அப்படியே கவர்ந்துவிடுகின்றார்கள். நம்மை முழுக்க முழுக்க நம்பவும் வைத்து அவ்வளவு நெருக்கம் கொண்டவர்கள் போலப் பழகுவார்கள். ஆனால் உண்மையில் நண்பனுக்குத் தேவையான பண்பு சிறிதேனும் அவர்களிடத்தில் இருக்காது.