பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

நீர்வேட்கை அதிகமாகக் கொண்ட ஒருவன் எவ்வளவு ஆவலுடன் நீரைப் பருகுவானோ அவ்வளவு வேகமாக நம்மிடம் அன்பைப் பெய்து நம்மை மயக்கி விடுவார்களாம். இவர்களும் ஒருவகையான பகைவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பண்பில்லாத இப்படிப்பட்டவர்களைப்பற்றிப் பேசுகின்ற ஆசிரியர் தண்ணீரைக் குடிப்பது போல் நம்மை விழுங்கி விடுவார்கள் என்று கூறுகின்ற போது நமக்குச் சிரிப்பது போன்ற உள்ள எழுச்சி தோன்றுகிறது என்றாலும் பகைவர்களான நண்பர்கள் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்ற வகைகள் நம்மைப் பெரு வியப்பிற்கு உள்ளாக்கி விடுகிறது. குறட்பாவினைக் காண்போம்.

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.

குறட்பாவினை ‘இனிது’ என்ற சொல்லினால் முடித்தார். தண்ணிரைப் போல் குடித்து விழுங்குகிறவர்களின் நட்பு குறையக் குறைய நமக்கு இன்பம் அதிகரிக்கும் என்று கூறினர். அவர்களின் நட்பு இருக்கும் வரையிலும் அல்லது அவர்கள் நட்பு பெருகப் பெருக நமக்குத் துன்பமேதான் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

ஆகவேதான் ‘குன்றல் இனிது’ என்றும் தெளிவுபடுத்தினர். பருகுவது போன்ற அன்பைப் பெய்கின்ற பண்பு இல்லாதவர்களின் நட்பினை, ‘பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை’ என்று சொன்னர், அத்தகையவர்களின் தொடர்பு - நட்பு - எக்காலத்திலும் எக்காரணங் கொண்டும் பெருகவே கூடாதாம்.

நீரைப் பருகுவது போல ஆளையும் பருகிவிடுவார்களோ என்பது ஆசிரியரின் நகைச்சுவையும் நயமும் கொண்ட உள்ளப் பாங்கினைக் காட்டுகின்றதென்பதில் என்ன ஐயம் இருக்க முடியும் ? -