பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

குறட்பாக்களில் மறைந்தும் வெளிப்பட்டுமுள்ள ஆழ்ந்த கருத்துகளைப் பன்முறையும் சிந்தித்துச் சிந்தித்துப் பார்த்தால்தான் உண்மையும் ஆசிரியரின் உள்ளமும் விளங்குகின்றன. இன்றேல் குறட்பாக்களின் நயமான கருத்தாழமும் உலகியல் நடைமுறை எடுத்துக் காட்டும் விளங்கிவிடுவனவாகா.

ஆதலால்தான் குறட்பாக்களின் மேற்போர்வைப் பொருளுடன் நின்று விடுதல் குறட்பாக்களைப் புரிந்து விடுதல் ஆசாது. குறட்பாக்களின் புதை பொருள் கருத்துகள் தெரிந்து புரிய ஆழ்ந்து (சிந்தித்தலே உதவிபுரியும் என்பதாம். குறட்பாக்களின் ஆழத்தைப் புரிந்து இன்புற நடைமுறை அனுபவங்களை வைத்துக் காணலாம்.

நிலக்கடலை :

நமது நாட்டில் நிலக்கடலை யென்பது எல்லோருக்கும் தெரிந்த வொன்றேயாகும். இதனை வேர்க்கடலை யென்றும் கூறுவர். ‘மணிலா’ என்று சொல்லுவதும் உண்டு. இதனைப் பயிரிடும் முறையும் எளிதானதுதான். தெரிந்துகொள்ளமுடியாத அவ்வளவு புதுமையானது மன்று.

ஆனால் முற்றிய பிறகு நிலக்கடலையினைத் தோண்டி யெடுப்பதில்தான் அறிவும் ஆற்றலும் திறமையும் இருக்கின்றன வென்று கூறலாம். நிலக்கடலை பூமிக்கு மேல் தென்படாததாகும். கடலையெல்லாம் பூமிக்குள்ளே தான் இருக்கும். ஆதலால்தான் நிலக்கடலை யென்றே பெயர். நிலக்கடலையினை வெட்டித் தோண்டியெடுக்கும்போது பக்குவமாக எடுப்பார்கள்.

அப்படி யெடுத்தால் ஒவ்வொரு செடியிலும் - அதாவது ஒவ்வொரு செடியின் வேர்களிலும் ஐம்பது முதல் ஐந்நூறு வரை கடலைகள் இருக்கும். நிலத்தினைத் தோண்டி மண்ணைக் கிளறியெடுக்கும் பான்மையில் நிலக்கடலைகள் அத்தனையும் கிடைக்கும்.