பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சிரித்து மகிழ்தல் என்ற தலைப்பில் சிரித்து மகிழ்வது எப்படி என்பதை விளக்குகிறார்.

இப்படி ஆசிரியர் ஓர் தலைப்பின் கீழ் கூறும் விளக்கத்தின் இறுதியில் கூறும் கருத்தையே தலைப்பாகக் கொண்டு அடுத்த இயலை விளக்குகிறார். பெரும்பாலும் அவர் அந்தாதி முறையில் தலைப்புகளைக் கொடுத்து விளக்கியுள்ள திறம் வியக்கத்தக்கது.

திருக்குறளார் திருக்குறளின் நகைச் சுவையைத் திரட்டிக் கொடுத்ததை உட்கொண்டபின் நம் உள்ளம் மற்ற பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள நகைச் சுவையை ஆய்ந்து உட்கொள்ளும்படி தூண்டுகிறது.

தலைவன் பார்க்கும்போது தலைவி தரையைப் பார்ப்பாள். அவன் பார்க்காதபோது அவள் அவனைப் பார்த்து மெல்ல நகுவாள். அது அவள் அவனே விரும்புகிறாள் என்பதை அறியும் குறிப்பு என்று வள்ளுவர் கூறினர்.

தலைவன் இறந்து பின்னற்றலைக் கண்டு தலைவி சிரித்த தாகவும் புலவர்கள் பாடினர்கள்.

தலைவி தோழியிடம் கூறுகிறாள்: பெருங் கடற்சேர்ப்பன் ‘இன்னுயிர் வெளவிய நீ யார்?’ என்று தான் நம்மை வருத்துவதை அறியாமல் நம்மால் தான் வருந்துவதைக் கூறி சுடர்நூதல் நோக்கித் தொழுது நின்றது நகையாகின்றது. (நற்றிணை 245.)

தலைவி தோழியிடம் கூறுகிறாள்: தினப்புனத்தில் ஒருவன் புரவலன் போன்ற தோற்றத்துடன் வந்து இரவலன் போலப் பணிமொழி சொல்லி ஏசற்று என் குறைப் புறனிலை முயலும் அண்கணாளனை நகுகம் யாமே. (அகநானூறு 32)

தலைவி கூறுகிறாள் : நகை நனி யுடைத்தால் தோழி! இளமுலை நோக்கு நெடிது நினைந்து நில்லாது பெயர்ந்தனன் ஒருவன். அதற்கே என்னும் நோக்கும் இவ் வழுங்கல் ஊரே. (அகநானூறு 180)

ஊரலர் துாற்றல் தலையைப் பார்த்து நகைப்பதாகும்.