பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


நாம் நகை யுடையம் நெஞ்சே, நம்மொடு தான்வரும் என்ப தடமென் தோளி என்று தலைவன் உடன் போக்கை எண்ணி அடைந்த மகிழ்ச்சியை நகை என்று புலவர் சொன்னர். (அகநானூறு 121)

தலைவி தோழியிடம் சொல்கிறாள்:
நகை நீ கேளாய் தோழி அல்கல்
எய்யாது பெயருங் குன்ற நாடன்
இல்வந்து நின்றோன் கண்டனள் அன்னை
வல்லே யென்முகம் நோக்கி
நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே
அகநானூறு 248, கபிலர்.


அன்னை தன் மகளின் கள்ளக் காதலனைக் கண்டதும் வந்த கோபத்தில் சிரித்தாள்.

இறைவளை நல்லாய் இது நகையா கின்றே
கறிவளர் தண் சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள் மற்றன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள்
சிலப்பதிகாரம், குன்றக்குரவை.


தலைவிக்குக் காதலன் தந்த நோயை முருகன் தந்தான் என்று எண்ணி அன்னை வெறியாட வேலனை அழைத்தாள். அதைப் பார்த்து தலைவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

வெறியாடும் இல்லோர் பெருநகை காண தலைவன் வரவேண்டும் என்று தலைவி விரும்பினாள். (குறுந்தொகை 111). அவள் தலைவனை முயங்குந்தோறும் வீட்டில் வேலன் வெறியாடுவதை நினைத்து சிரித்துக்கொள்வாள். (அகநானூறு 22).

"திருக்குறளில் நகைச்சுவை” என்ற இந்நூல் கல்லூரியில் தமிழ் பாடநூலாக வைக்கும் தகுதியுடையது.

க. சண்முகசுந்தரம்