பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

தமது மனைவியார் அருகில் அமர்ந்திருக்கும்போது வேதநாயகம் பிள்ளை பாடலொன்று பாட ஆரம்பித்தாராம். முதலடியை எழுதினாராம். அந்த அடியினைப் பார்த்தபோது அவருடைய மனைவியார் திடுக்கிட்டு வியந்தாராம். ‘மாதரை நினையாதே’ என்பதுதான் அப்பாடலின் முதலடியாகும்.

இதனை அருகில் உட்கார்ந்துகொண்டிருந்த அவருடைய மனைவியார் வேதநாயகம் பிள்ளையைப் பார்த்துக் கேட்டாராம் : “நான் இருக்கும்போதே இப்படியானால் என் நிலைமை என்ன ஆவது?” உடனே வேதநாயகம் பிள்ளை சிரித்துக்கொண்டு அந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பக்கத்தில் ஒரு சிறிய கோடு போட்டு இரண்டு எழுத்துக் களால் ஆனவொரு சொல்லினை வைத்து அந்த அம்மையார் பெரும் வியப்படையுமாறு செய்தாராம்.

“மாதரை நினையாதே - மறு மாதரை நினையாதே” என்பதே அவர் செய்ததாகும். இரண்டே இரண்டு எழுத்துக்களைச் சேர்த்து அமைத்துக் காட்டிய புலமை நுட்பத்தினை என்னவென்று நாம் கூறுவது! மற்ற மாதர்களை நினைக்கக் கூடாது என்பதே அதனுடைய பொருளாகும். இவ்வாறு நுணுக்கமான கருத்துகளை எளிதாக அமைத்து அறிவூட்டும் பேராசிரியர்களின் கருத்துகளைச் சிந்தித்து மகிழ்தல் நமது கடமையன்றோ”.

சிரிக்காதே :

சிரிக்கவே கூடாது என்று ஆசிரியர் வள்ளுவளுர் நமக்கு அச்சுறுத்துகின்ற இடமும் உண்டு. நகைத்து மகிழ்தல் என்பது பொதுப்பட அரிய பண்பாக இருப்பதைப் பல இடங்களில் பல்வேறு கருத்துகளைத் தாங்கி நமக்குக் கூறப்படுகின்ற தென்றாலும் அக்குணத்தினை இடமறிந்து பயன்படுத்த வேண்டுமென்பது மிகவும் இன்றியமையாத அறிவுரையாகின்றது.