பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சிரித்து மகிழக் கூடாத இடத்தில் சிரித்து மகிழ்வோமே யானால் பெருந்தீங்கு விளைந்துவிடுவதாகும் என்றுகூட ஆசிரியர் எடுத்துக் கூறுகின்றார். ஒரு மனிதனுக்கு இனிமையாக இருக்கும் நல்லுணவு மற்றொருவனுக்கு நஞ்சாக முடியலாம் என்றொரு பழமொழி கூறுவதுண்டு.

அதனுடைய பொருள் என்னவென்றால் எப்பொருளையும் இடமும் காலமும் அறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதேயாகும். இல்லையென்றால் தீமையாகவே முடியலாம். அதுவேபோல நாம் சிரித்து மகிழ்ந்து பேசக்கூடாத இடத்தில் சிரிப்பு நிகழுமேயானல் அது நல்லதன்று என்பது குறிப்பு.

நல்ல நன்மைகளைப் பிறருக்குச் செய்தல் உயர்ந்த பண்பாடு என்று இயல்பாகக் கூறுகின்றோம். ஆனால் நல்ல செயலினையே - நன்மையினையே - ஒருவனுக்குச் செய்தாலும் அதனால் நமக்குத் தீமையாகி, நாம் செய்தது தவறு என்று உணரவேண்டிய நிலைமையும் ஏற்பட்டுவிடும் என்கிறார் ஆசிரியர்.

ஆகவே நாம் நல்லதுதானே மற்றவனுக்குச் செய்கிறோம் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கக் கூடாது என்கிறார். யாருக்கு நன்மை செய்கிறாய் என்பதையும் சிந்தித்துப் பார்த்த பிறகே நீ அச்செயலினைச் செய்ய முற்பட வேண்டுமாம்.

ஏழை :

செல்வர் ஒருவர் வீட்டில் சிறப்பான விழாவொன்று நடந்ததாம். ஏழை யொருவன் ஏதாவது சன்மானம் கிடைக்குமென்று அவர் வீட்டுக்குப் போயிருந்தான். செல்வர் அவனைப் பார்த்தார். அவனுக்கு ஐந்து ரூபாய் இனாமாகக் கொடுத்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த ஏழை வாங்கிக்கொண்டு வந்தான் ; மிகவும் பெருமைப் பட்டுக்கொண்டான்.