பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

செயல்களையும் அந்த இடத்தில் செய்தல் தகாது என்பதனை அறிந்துகொள்ள வேண்டியவர்களாகின்றோம்.

இக் குறட்பாவில் சிந்தித்துத் தெரிந்தறிய வேண்டிய சொல் ‘அவித்து’ என்பதாகும் . ‘அவித்தல்’ ‘அவித்து’ என்று குறிப்பிடப்படும் சொற்களுக்குத் தனிச் சிறப்பான பொருளுண்டு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவித்தல் :

ஆசிரியர் திருவள்ளுவர் தமது அரிய நூலில் சொற்களைப் பயன்படுத்தும் முறை மிகப் பெரிதும் உய்த்துணர்ந்து பாராட்டப்பட வேண்டிய தொன்றாகும். சில சொற்களை ஆசிரியர் பலமுறை பயன்படுத்துகிறார். சில சொற்களைச் சிற்சில இடங்களில்தான் பயன்படுத்துவார். குறிப்பான சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்துவதில்லை.

அங்ஙனம் திருக்குறளில் மூன்றே இடங்களில் பயன்படுத்தப்படும் சொல் ‘அவித்தல்’ என்பதாகும் இச்சொல் சிந்தித்துப் பொருள் தெரிந்துகொள்ளுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ‘பொறி வாயில் ஐந்து அவித்தான்’ என்று தொடங்குகின்ற குறட்பாவும், ‘ஐந்து அவித்தான் ஆற்றல்’ என்று கூறப்படுகின்ற குறட்பாவும், நாம் இப்போது விளக்கிக் காண்கின்ற ‘செவிச் சொல்லும்’ என்று தொடங்கப்பெறும் குறட்பாவும் ஆகிய மூன்று குறட்பாக்களிலும் இச் சொல்லினைக் காணுகின்றோம்.

‘அவித்தல்’ என்பது அழித்தல் ஒழித்தல் என்னும் பொருளில் நேரிடையாகக் கண்டித்துக் கூறப்படும் பொருளில் கூறப்பட்டுள்ள தென்பது ஆகாது. மூல காரணமான பொருள் அப்படியே இருக்க அதிலிருந்து முளைக்கும் குறும்பும் துன்பமுமான செயல் நீக்கப்பட வேண்டும் என்பதே அதனுடைய திரண்ட பொருளாகும் என்று உணர்தல் வேண்டும்.