பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

இறைவனைக் குறிக்கும்போது ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்று கூறுகின்றார். இறைவனை அவன், அவள், அது என்ற மூன்று பெயர்களினாலும் அழைத்தல் இறைமுறை இலக்கணமென்று கூறிக்கொள்ளுவ துண்டு.

மெய், வாய் கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் பொறி களாகும். இவைகளைத்தான் ஐம்பொறிகள் என்று வழக்கில் வைப்பதுண்டு. இவைகளை வழிகளாகக் கொண்டு தான் ஐந்து ஆசைகளும் பிறக்கின்றன. இந்த ஐந்து பொறிகளினால் ஏற்படும் ஐந்து புலன்களை ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்று கூறுவர்.

பொறிகளின் வழியே நிற்கும் புலன்களும் புலன்களினாலாகிய ஆசைகளையும் அவித்தல் வேண்டும் என்பதே, ‘பொறி வாயில் ஐந்து அவித்தான்’ என்று தொடங்கும் குறளடிச் சொற்கள் கொண்டுள்ள செறிந்த பொருளாகும். 'அவித்தல்’ என்பது அவைகளின் செயல்களை ஒழித்து அழித்தல் என்பதன்று, அவைகளினல் முளைக்கும் குறும் பான தீய ஆசைகளைப் போக்குதல் என்பதாகும். விரி வாகச் சிந்தித்து ஆழ்ந்த பொருளறிந்து தெளிதல் வேண்டும்.

முனிவர் :

இங்ஙனமே, ‘நீத்தார் பெருமை’ என்ற அதிகாரத்தில் வரும் குறட்பாவினையும் கண்டு தெளிதல் வேண்டும்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலும் கரி.

இக் குறட்பாவில் முற்றும் துறந்த முனிவர்களின் சிறப்பியல்பும் ஆற்றலும் கூறப்படுகின்றன. ‘அவித்தான்’ என்பது அடக்கினான் என்றே பொருள்படும். அச்சொல்வின் மூலகாரணமான பொருட்செறிவினை மேலே கண்டோம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அழித்துவிடுதல் என்றோ அல்லது அவைகளில் உண்டாகும் செயல்களை அடக்கி ஒடுக்கி விடுதல் என்றோ பொருளாகாது.