பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

இடங்களிலும் ஒரே மாதிரியான பொருளினைத் தருவதாகாது என்பது தெள்ளத் தெளிய விளங்கிவிட்டது.

தூது :

உலக மேதைகள் ஒன்றுபடுகின்ற வாய்ப்புகளில் நகைத்துக் சொல்லல் என்னும் இலக்கணம் மிகவும் இன்றியமையாத பயனைத் தருவதால் அதனையும் ஆசிரியர் ஒரு நல்ல பண்பாக அமைத்துக் காட்டுகின்ற இடம் தூதுவர்களைப்பற்றிப் பேசுகின்றபோது வருகின்றது.

அரசியல் உலகம் வள்ளுவர் நூலில் பெரும் பகுதியினைக் கொண்டுள்ளதாகும். அவ்வுலகில் தூதுவர்கள் பெறுகின்ற இடம் மிகத் தெளிவாகவும் ஆழ்ந்த பொருளுள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் போன்று மிகவும் பொறுப்பான பணிபுரிபவர்கள் தூதுவர்களாவர். அமைச்சர் பதவிக்கு ஒப்பக் கருதப்பட வேண்டிய பதவியே தூதுவர்கள் பணியுமாகும்.

பிற நாட்டிற்குத் தூது செல்லும் தலைவர்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கூறுவதுமுண்டு. ஒரு வகையினர் தமது நாட்டு மன்னர் என்ன செய்திகளைச் சொல்லி அனுப்புகிறார்களோ அவைகளைத் தக்க முறையில் எடுத்துக் கூறிப் பக்குவமாக நடந்து திரும்ப வேண்டியவர்களாகக் கருதப்பட வேண்டியவர்கள்.

மற்ற வகையினர் இன்னும் மேம்பட்டவர்களாகக் கருதப்பட வேண்டியவர்கள். தம் நாட்டுக் கருத்துகளை வேற்று நாட்டுத் தலைவர்களுக்கு எடுத்துக் கூறி, கருத்துகளைத் தம்முடைய விருப்பப்படிக் கலந்து பேசி முடிவு எடுத்துத் தம்முடைய நாட்டுக்கேற்ற நன்மைகளைத் தேடி வருபவர்களாவர். இந்த இரண்டாவது வகையான தூதுவர்களை மிகமிகப் பொறுப்பான சிறப்பான செயல்களுக்காக வெளி நாடுகளுக்கு அனுப்புவார்கள்.