பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.

இவ் வரிய குறட்பாவின் கண் எத்துணைப் பெரிய கருத்துரை அடங்கியுள்ளதென்பதனை உய்த்துணர்ந்து அறிவார் நன்குணர்வர். இக் குறட்பாவில் நான்கு உண்மைகளை ஆசிரியர் தருகின்றார்.

தூதுவன் சொல்லக்கூடியவைகளைத் தொகுத்துக் சுருக்கமாக விளங்குமாறு சொல்லவேண்டும். பேசுகின்ற போது வெம்மையான - சுடுகின்ற - கடுபையான - சொற்களைச் சொல்லக்கூடாது. மூன்றாவதாக, சில சுவையில்லாத செய்திகளைச் சொல்லவேண்டியிருந்தால் அவைகளைக் கேட்டவர்கள் மனமகிழும்படி இனிய சொற்களால் சொல்லுதல் வேண்டும். நான்காவதாக, அத்தூதுவன் பேசுகின்ற அவ்வளவும் தனது நாட்டுக்கு நன்மை பயப்பனவாகவும் இருத்தல் வேண்டும்.

'சொல்லுதல்' என்பது ஊன்றிச் சிந்திக்கவேண்டியவொன்றாம். ஆசிரியர் பேசும் ஆற்றலினை மிகவும் நுணுக்கமான திறம் செரிந்த பயன் தருகின்ற செயலாகக் குறிப்பிடுகின்றார். பிறருக்கு. நன்றாக விளங்குமாறு எடுத்துரைத்தல் எளிதில் முடியக்கூடிய ஒன்றன்று. நாள் பலவாகப் பயின்ற பின்னரே அந்த ஆற்றல் ஒருவருக்கு வருதல் முடியும்.

அவ்வாறு எளிதாகவும் பிறருக்கு விளங்கிப் புரியுமாறும், கூறுதலோடு கேட்பவர்கள் மனமகிழ்ச்சி கொள்ள நகைச் சுவையுடன் தான் சொல்லும் கருத்து நழுவாமல் கூறுதல் - இன்னும் கடினம் - என்று கூறுவர். ஆகவே தான் வேற்று நாட்டுத் தலைவர்கள் இன்புறக் கேட்குமாறு சொல்லுதல் வேண்டும் என்று கூறவந்த இடத்தில் 'நகச் சொல்லி' என்று குறிப்பிட்டார்.

இக் குறட்பாவில் சொல்லுதல் என்பதனைப் பொதுவாக அமைத்துக்கொண்டு, தொகச் சொல்லுதல் நகச்-