பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


அழைத்து கோவலனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு வருக' என்று கூறிவிட்டானாம்!

என்னே சொற்களில் சிறிது மாற்றம் செய்த விளைவு! கோவலன் கொலை செய்யப்பட்டான். பாண்டிய மாநகரம் தீக்கிரையாயிற்று. இவ்வாறு சொற்களின் ஆழப் பொருள்களைப் பலவாறு விளக்கிக்கொண்டே போகலாம். அவ்வாறு கூறி வருகின்றபோது நகைச்சுவை கலந்த சொற்கள் எவ்வளவு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதனைப் பலப் பலவாக விளக்கவும் வேண்டுமோ?

கவிராயர் :

அண்மையில் தமிழ்நாட்டில் பெருங்கவிராயர் ஒருவர் வாழ்ந்தார். அவரின் பேச்சாற்றல் - சொல்லாற்றலினைப் பற்றி வியந்து கூறுவதுண்டு. அவரை ஆதரித்த குறுநில மன்னரிடம் அவர் நீண்ட நாட்கள் தங்கியிருந்தார். ஓய்வு கிடைத்தபோதெல்லாம் மன்னர் கலிஞரை, அருகில் வைத்துக்கொண்டு உரையாடி மகிழ்வதுண்டு.

ஒரு நாள் கவிஞரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மன்னர் கவிஞரைப் பார்த்து 'இன்று சமையல் எப்படி? சாப்பாடு நன்றாக இருந்ததா?' என்று கேட்டார். அன்றைய தினம் செய்த உணவு உண்மையிலேயே நன்றாக இல்லை தான். ஆதலால் மன்னர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் கவிஞர், 'இன்று சாப்பாட்டில் உப்புமில்லை; புளியுமில்லை' என்று கூறிவிட்டார்.

மன்னருக்குச் சமையற்காரன் மேல் கடும் கோபம் வந்துவிட்டது. உடனே சமையற்காரனுக்குச் சொல்லியனுப்பினார். சமையற்காரன் அஞ்சி நடுங்கிக்கொண்டு வந்தான். மன்னர் கவிஞர் கூறியதைக் குறிப்பிட்டு, "இனி இப்படிப்பட்ட தவறு செய்தால் உனக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்" என்று சுண்டித்து அனுப்பிவிட்டார்.