பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


'பார்க்க வந்தேன்' என்று தானே கூறினார். 'பேச வந்தேன்' என்று கூறவில்லையே. நம்மை யறியாமலேயே நம்மிடம் இருந்து வரும் இயற்கைப் பண்பாடுகளை நாம் அறிந்துணரும்போது நமக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

வந்தவர் உள்ளத்தில் இருந்த எண்ணம் என்ன? 'உங்களிடம் பல செய்திகளைப் பேசுவதற்குத்தான் வந்தேன். முகமலர்ச்சியுடன் காட்சியளித்து வரவேற்றால் பேசலாம் என்னும் எண்ணம் தோன்றும். அப்படி வரவேற்பிலேயே முகமலர்ச்சி யில்லை யென்றால், பிறகு எப்படி அளவளாவிப் பேசுவது என்று நினைத்துத் திரும்பி விடுவேன்' என்பதெல்லாம் வந்தவர் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களும் சிந்தனைகளு மாகும்.

ஆதலால் தான் யாரையும் சந்திக்கின்றபோது நாம் 'பார்க்க வந்தேன்' என்று கூறுவது இயல்பாக அமைந்து விட்டது. முகமலர்ச்சி எவ்வளவு இன்றியமையாதது என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு தேவையில்லை.

மற்றும் பழக்கத்தில் காணப்படுகின்ற பலசெயல்களைச் சிந்தித்துப் பார்க்கின்ற போது அன்றாட வாழ்க்கை முறைக்கு, ஆசிரியர் அமைத்துக்காட்டும் உண்மைகள் எவ்வளவு பொருந்துவனவாசு இருக்கின்றன வென்ற உண்மை தெளிவுறும்.

வாணிகம் செய்யும் ஒருவர் தன் பணியாளிடம் ஒருவரைப் பார்த்துச் சில செய்திகளை அவருக்குச் சொல்லி வருமாறு அனுப்பினார்; பணியாள் சென்றான்; சென்று சிறிது நேரம் கழித்துத் திரும்பினான். வணிகர் அவனைக் கண்டு சென்று வந்த செய்தி என்ன வாயிற்று என்று கேட்டார். பணியாள், 'ஒன்றும் பேசவில்லை' என்றான். 'ஏன்' என்று கேட்டார். 'அவரிடம் ஒன்றும் பேச முடியவில்லை' என்று கூறினான். 'ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?' என்று மீண்டும் வணிகர் கேட்டார்.