பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அதற்குப் பணியாள், "அவரிடம் பேசலாமென்று பார்த்தேனுங்க. அவர் மூஞ்சைக் காட்டுறாருங்க; அதனால் தான் பேசாமல் வந்துவிட்டேன்" என்று தனது பழக்கமான கொச்சைத் தமிழில் பேசினான். கடைக்காரருக்கு முதலில் அவன் கூறியது விளங்கவில்லை. சிந்தித்துப் பார்த்தார், பின்புதான் விளங்கியது. 'மூஞ்சைக் காட்டுறாரு' அஃதாவது 'முகத்தைக் காட்டுகிறார்' என்பதில் அப் பணியாளனின் கருத்து என்னவாக இருந்தது? 'முகத்தைக் கடுகடுத்துக் காட்டினார்' என்பதைத் தான் அவன் அவ்வாறு சொன்னான்.

இன்னும் கொஞ்சம் விளக்கிக் கூறப்போனால் மக்களுக்கு இருக்கவேண்டிய முகத்தை அவர் காட்டாமல் வேறு எதற்கோ இருக்கக்கூடிய முகம் போல அவர் காட்டியதால் அவன் பேசாமலேயே வந்து விட்டான் என்பது தான் தெளிவான பொருளாகும். மனிதனுக்கு இருக்கவேண்டிய முகமலர்ச்சியினை அவர் காட்டியிருப்பாரே யானால் பணியாள் பேசிவந்திருப்பான்.

பேசுவதற்கு வழி காட்டியாக இருப்பது மலர்ந்த முகமன்றோ? இனிமையான சொற்களைப் பேசுவதற்கு வழிகாட்டியாக - முதற்படியாக-வாயிற்படியாக இருக்கின்ற முகமலர்ச்சியினை எவ்வாறு ஆசிரியர் விளக்கி வைக்கிறார் என்பதைக் கூறும் குறட்பா அருமையாகக் காணப்படுகின்றது.

'அறமாவது என்னவென்றால், பிறரைக் கண்டபோதே முகத்தால் விரும்பி இனிதாகப் பார்த்து அதற்குப்பின் இருவரும் சேர்ந்தபோது மனத்தோடு பொருந்தி இனிய சொற்களைச் சொல்லுதலே ஆகும்' என்னும் கருத்தினை மெய்ப்பிக்கின்றது.

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொல் லினதே அறம்