பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


இக் குறட்பாவில் - முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - என்னும் சொற்கள் முகத்திற்குரிய இலக்கணத்தைக் கூறிவிடுகின்றன வென்று சொல்லலாம். இனிது நோக்குதல் என்பதற்கு முதற்காரணம் முக மலர்ச்சியாகும்.

முகமலர்ச்சி இனிது நோக்குகின்ற தன்மையினை உண்டாக்கு மென்றும் அதன் வழியாக இன்சொல் வரும் என்றும் அவ்வாறு வருகின்ற இன்சொல் தான் மனத்தோடியைந்த உண்மையான இனிமை கொண்ட தென்பதும் உணர்த்தப்பட்டது. இவ்வாறு தோன்றுகின்ற முக மலர்ச்சியினைத்தான் 'நகை' யென்று அழகாகக் குறிப்பிட்டார்.

முகத்தில் தோன்றுகின்ற புன்முறுவல் நற்குடியில் பிறந்த நன்மக்களுக்கே உரியதென்றும் அது எப்போதும் காணப்படுவதென்பதையும் சொல்லி வைத்தார். 'உள்ளம்' தூய்மையாக இருந்தால் தான் அறமாகும் என்பதற்காக, 'அகத்தானாம்' என்று கூறினார்.

"முகத்தை நன்றாக வைத்துக்கொள்" என்று சில சமயங்களில் குறிப்பாக மங்கலமான நேரங்களில் சொல்வதை நாம் கேட்பதுண்டு. 'நன்றாக வைத்துக்கொள்' என்றால், முகமலர்ச்சியுடன் இரு என்பதே பொருளாகும்.

ஒரு சிலர் அன்பினால் தங்கள் நண்பர்களிடம் பேசுவதுண்டு. தங்கள் ஊருக்கு வந்து போகவேண்டு மென்று கூப்பிடுவார்கள். அதற்கு மற்ற நண்பர் 'நேரமில்லை' என்று பதில் சொல்லுவார். உடனே அழைத்த நண்பர் அவரைப் பார்த்து, "நீங்கள் அதிக நேரங்கூடத் தங்க வேண்டா! உங்கள் முகத்தைக் கொண்டுவந்து காட்டிவிட்டுப் போங்கள்" என்று வற்புறுத்தி வேண்டுவார்.

அந்த வார்த்தைகளில் காணப்படும் உட்பொருள் என்ன? முகமலர்ச்சிக்கு அவ்வளவு பெருமை. உண்டென்பதும் மனிதப் பிறவிக்கே முகந்தான் உயிர்ப் பொருள்.