பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


இக் குறட்பாவில் - முகத்தான் அமர்ந்து இனிது என்பதும் தெள்ளத்தெளிய விளங்குவதாகின்றது. ஆதலால் இவ் வரிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மூல காரணமாக 'நகை' என்று கூறினார்.

மனிதன் :

சிரிப்பதையும் அழுவதையும் - வைத்துக்கொண்டு அறவுரை புகட்டவந்த பெரியார் ஒருவர் கீழ்வருமாறு கூறினார் : "ஏ! மனிதா! நீ பிறக்கும்போது அழுது கொண்டு பிறக்கின்றாய்! உன்னைச் சுற்றிலுமுள்ளவர்கள் சிரித்து மகிழ்கின்றார்கள். பிறக்கும்பொழுது அழுதுகொண்டு பிறந்த நீ, இறக்கும் போது சிரித்துக்கொண்டு இறக்க வேண்டும். நீ பிறக்கும்போது சிரித்து மகிழ்ந்தார்களே, அவர்கள் நீ இறக்கும் போது அழவேண்டும். இதுவே மனித வாழ்க்கையின் குறிக்கோள்" இப் பொன்னுரையினைப் பன்முறையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நாம் பிறக்கும்போது அழுதுகொண்டு தான் பச்சைக் குழந்தையாகப் பிறந்தோம். பிறந்தவுடனே தாய் தந்தை உற்றார் உறவினர் அத்தனை பேரும் 'குழந்தை பிறந்தது' என்ற மகிழ்ச்சியினால் சிரித்து ஆனந்த முற்றார்கள்.

இதனை மறுத்து யாரும் வேறுபாடான கருத்தினைக் கூறிவிடமுடியாது. 'இறக்கும் போது சிரித்துக்கொண்டு இறக்க வேண்டும்' என்னும் தத்துவத்தில் அடங்கியுள்ள உண்மையினைத்தான் தெளிவுபடுத்த வேண்டும். இறக்கும் போது இறக்கப்போகிறவன் மன மகிழ்ச்சியுடன் எல்லோரிடத்திலும் விடைபெற்றுக்கொண்டு போகிறான் என்று சொல்ல முடியாது.

எப்படிப்பட்டவனும் இறக்கப்போகிறோம் என்று தெரிந்த மாத்திரத்திலேயே கவலைப்படுகிறான்; வேதனைப் படுகிறான்; ஏன் இறக்காமலேயே இருந்துவிடக் கூடாது என்று கூட நினைக்கிறான்! ஏன் அப்படி நினைக்கவேண்டும்!