பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினைத்தூய்மை

173



4.இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

தடுமாற்றம் சிறிதும் இல்லாத அறிவினையுடையவர் எத்தகைய துன்பத்தில் ஆழ்ந்த போதும், அது தீர்த்தற் பொருட்டு இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்.

இடுக்கண்-துன்பம்; இளிவந்த-இழிவான செயல்கள்; நடுக்கற்ற காட்சி-தடுமாற்றம் சிறிதும் இல்லாத அறிவு; அஃதாவது எத்தகைய துன்பத்திலும் நிலை கலங்காத தன்மை; காட்சி-இங்கே அறிவினைக் குறிக்கும். 654

5.எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

நான் எத்தகைய தவறுகளைச் செய்து விட்டேன் என்று பிறகு எண்ணி வருந்தக்கூடிய செயல்களை என்றென்றும் செய்யா தொழிக, அத்தகைய குற்றங்களை ஒரு முறை செய்ய நேர்ந்து விட்டாலும், மீண்டும் அவற்றைப் புரியாதிருத்தலே நல்லது.

எற்று-எத்தகையது; இரங்குவ-வருந்தக் கூடிய செயல்கள். 655

6.ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

தன்னைப் பெற்றெடுத்த தாயின் பசித் துன்பத்தை நேரில் கண்டு வருந்தத் தக்க நிலை நேர்ந்தாலும், அறிவின் மிக்க பெரியோர் அறிந்து இகழ்ந்து கூறத் தக்க செயலினை ஒருவன் செய்யா திருத்தல் வேண்டும். 656

7.பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

பெரிய குற்றங்களைத் தாங்கிக் கொண்டு பெறத் தக்க செல்வத்தை அறிவிற் சிறந்த பெரியோர்கள் ஏற்க மாட்டார்கள்; அத்தகைய குற்றங்களைச் செய்ய இசையாது வருந்தும் கொடிய வறுமையான நிலையையே விரும்புவர்; அதுவே சிறந்தது.

மலைந்து-மேற்கொண்டு; நல்குரவு-வறுமை. 657