பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

திருக்குறள்



தமக்கு உடன்பாடில்லாததாக இருப்பினும் நட்பின் உரிமை பற்றி ஒருவர் செய்த செயலைத் தாம் செய்தாற் போல எண்ணி, அந்தச் செயலுக்கு உடன்படாவிட்டால் பழகிய நட்பு என்ன பயனைத் தரும்?

செய்தாங்கு அமைதல்-தாம் செய்தது போன்றே எண்ணி ஏற்றுக் கொள்ளுதல்; அமையாக் கடை-உடன் படாவிடின். 803

4.விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்.

நண்பர் உரிமை பற்றித் தம்மைக் கேளாமலே ஒன்றைச் செய்தால் அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடு போற்றி, அதற்கு உடன்பட்டிருப்பர் அறிஞர்.

விழைதகையால்-விரும்பும் தன்மையால்; வேண்டி-விரும்பி; கெழுதகையால்-உரிமை பற்றி. 804

5.பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

எண்ணி வருந்தத் தக்க செயலை நண்பர் செய்தாராயின் அஃது அவருடைய அறியாமை என்றாவது, அன்றி மிக்க உரிமை என்றாவது உணர்தல் வேண்டும். 805

6.எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

நட்பு முறையில் முதிர்ந்து அதன் எல்லைக்கண் நின்றவர்கள் தம்மோடு பழைமையில் மாறாமல் நின்றவர் தம் நட்பினை அவரால் துன்பம் வந்த போதிலும் கை விட மாட்டார்கள் .

எல்லை-நட்பின் அளவு அல்லது வரம்பு; துறவார்-நீக்கி விட மாட்டார்; தொலைவிடத்தும்-துன்பம் நேர்ந்த போதும்; தொலைக்கண் நின்றார்- நெடுங்காலம் தொட்டு நண்பராக இருப்பவர். தொடர்பு-நட்புரிமை. 806

7.அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

அன்புடன் தொன்று தொட்டுப் பழகிய நட்பினையுடையவர் தமக்குக் கேடு விளையத் தக்க செயல்களைத் தம் நண்பர் செய்தாலும் அவரோடுள்ள அன்பிலிருந்து நீங்க மாட்டார்.