பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழைமை

215



10.மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈந்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

குற்றமற்றவர் நட்பினைத் தேடி அடைக; ஒத்த பண்பு இல்வாதவர் நட்பினை ஏதாவது ஒன்றைக் கொடுத்தாயினும் விட்டு நீங்குக.

மருவுதல்-சேர்தல்; ஒருவுக- நீங்குக; ஒப்பிலார் நட்பு-ஒத்த பண்பு இல்லாதவர் நட்பு. 800

81. பழைமை


1.பழைமை எனப்படுவ தியாதெனில் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால், அது பழகியவர் உரிமையால் செய்வனவற்றைக் கீழ்ப் படுத்தாமல் அதற்கு உடன்படும் நட்பாகும்.

கிழமை-உரிமை; கீழ்ந்திடா நட்பு-தாழ்வு படுத்தாமல் அதற்கு உடன்படும் நட்பு; கீழ்ந்திடல்-சிதைத்தல், கீழ்ப்படுத்துதல்.

உரிமையால் செய்வன: 1. ஒரு செயலைக் கேளாது செயல். 2. கெடும் வகை செயல். 3. தமக்கு வேண்டுவன தாமே கொள்ளுதல். 4. பணிவு, அச்சம் முதலியன இன்மை. இவை முதலாயன என்பர் பரிமேலழகர். 801

2.நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

நட்பு என்பதற்குச் சிறந்த அங்கமாக இருப்பது நண்பர் உரிமை பாராட்டுவதே ஆகும் அந்த உரிமைக்கு அன்போடு இடங் கொடுத்தல் சான்றோரின் கடமையாகும்.

உறுப்பு-அவயவம், இங்கே 'நட்புக்கு இன்றியமையாத ஒரு பகுதி' என்பது பொருத்தமான பொருள். கெழுதகைமை-உரிமை, உப்பு-இனிமை. 802

3.பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.