பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேதைமை

225



7.ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைமை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

அறிவில்லாதவன் பெரிய செல்வத்தைப் பெற்றால், அவனோடு தொடர்பு இல்லாத அயலார் அனுபவிக்க, அவனுடைய சுற்றத்தார் உண்ண உணவு இன்றிப் பசியால் வருந்துவர்.

ஏதிலார்-அயலார்; யாதொரு தொடர்பும் இல்லாதவர்; ஆர- அனுபவிக்க; தமர்-தம்மவர், சுற்றத்தார்; உற்றக்கடை-பெற்றால். 837

8.மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

இயல்பிலே தவறு செய்யத் தக்க பேதை தன் கையில் ஒரு பொருளையும் பெற்றிருப்பானாகில், இயல்பிலேயே பித்துக் கொண்டுள்ள ஒருவனுக்குக் கள்ளையும் வார்த்தால், அவன் எத்தகைய தன்மையில் தலை கால் தெரியாமல் மயங்கிக் கிடப்பானோ அத்தகைய தன்மையில் இருப்பான்.

மையல்-பித்து, களித்தற்று-கள் குடித்து மயங்கியிருத்தற்குச் சமம்; தன் கையொன்று உடைமை-தன்-கையில் உள்ள ஒரு பொருள். 838

9.பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.

அறிவில்லாதவர் நட்பு மிகவும் இனியது. ஏனெனில் அவர் பிரிவாலே எவர்க்கும் எத்தகைய துன்பமும் நேரப் போவதில்லை; 839

10.கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

அறிவிற் சிறத்தோர் கூடியுள்ள கூட்டத்தில் அறிவற்ற பேதை புகுவது, தூய்மையல்லாதவற்றை மிதித்து, கழுவப்படாத காலை நல்ல படுக்கையில் வைத்ததற்குச் சமம் ஆகும். 840