பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரைவின் மகளிர்

245நட்டார்-நண்பர்; குறை-வேண்டுகோள்; நன்று-நல்ல அறச் செயல்; நன்னுதலாள்-அழகிய நெற்றியையுடையவள்; பெட்டாங்கு-விரும்பிய வண்ணம். 908

9.அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.

அறச் செயலும், அது முடித்தற்குக் காரணமாக அமைந்துள்ள பொருளும், பிற கடமைகளும் தம் மனைவியின் கட்டளைப் படி அடங்கி நடப்போருக்கு இல்லை.

அறிவினை-அறச்செயல், நீதி நூல்களில் கூறியுள்ள படி நடக்க முயலும் செயல்கள்; ஆன்ற-அமைந்த; ஆன்ற பொருள்- (அறஞ் செய்தற்கு) அமைந்த பொருள்; பிறவினை-பிற கடமைகள். 909

10.எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

சிந்தித்துப் பார்க்கும் உள்ளத்தோடு தகுந்த நிலையும் உடைய ஒருவருக்கு எந்தக் காலத்தும் மனையாள் வயப்பட்டு ஒழுகும் அறியாமை இல்லை.

எண்-எண்ணுதல், சிந்தித்தல்; இடம்-நிலை; நெஞ்சத்து இடம் என்பதற்கு விரிந்த உள்ளம் என்றும் பொருள் கொள்வர்; பெண் சேர்ந்து ஆம் பேதைமை-பெண்ணுக்கு அடங்கி நடக்கும் அறியாமை. 910

92. வரைவின் மகளிர்


1.அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.

ஒருவனை அன்பு பற்றி விரும்பாது பொருள் பற்றி விரும்பும் பொது மகளிர் இனிய சொற்கள் அவனுக்குத் தீமையைத் தரும்.

விழைதல்-விரும்புதல்; ஆய்தொடியார்-ஆய்ந்தெடுத்த வளைகளை அணியும் பெண்களைக் குறிக்கும் சொல்; இங்கே பொது மகளிரைக் குறிப்பிடுகிறது.