பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கள்ளுண்ணாமை

249



93. கள்ளுண்ணாமை


1.உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டு ஒழுகுவார்.

எப்பொழுதும் கள்ளின் மீது காதல் கொண்டு ஒழுகுபவர் பகைவரால் எப்பொழுதும் அஞ்சப்பட மாட்டார்; அன்றியும் உள்ள மதிப்பையும் இழப்பர்.

உட்குதல்-அஞ்சுதல்; ஒளி-மதிப்பு, புகழ்; எஞ்ஞான்றும்-எப்போதும்; காதல்-ஆசை.

'எஞ்ஞான்றும்' என்பது இடைநிலைத் தீவகம். 921

2.கண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்.

கள்ளை உண்ணுதல் கூடாது; சான்றோரால் நன்கு மதிக்கப்படுவதை விரும்பாதவர் உண்ண விரும்பினால் உண்ணக் கடவர்.

சான்றோர்-அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த பெரியோர்; எண்ணுதல்-நன்கு மதித்தல்.

நன்மதிப்பை விரும்பாதவர் ஒருவரும் இரார். எனவே, கள்ளுண்ணுதல் கூடாது என்பதனையே வள்ளுவர் இவ்வாறு வற்புறுத்தினார். 922

3.ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

தன்னைப் பெற்றெடுத்த தாயின் முகத்திலும் கள்ளுண்ணட மயக்கத்துடன் விழித்தல் அவளுக்குத் துன்பத்தையே தரும். அப்படியானால் ஒழுக்கம் நிறைந்த சான்றோர் முன்னால் ஒருவன் கள்ளுண்ட களிப்போடு நிற்றல் எத்துணை வெறுப்பைத் தரும்.

ஈன்றாள்-பெற்றெடுத்த தாய்; இன்னாது-இன்பத்தைத் தராது, துன்பினைத் தரும்;; களி-கள்ளுண்டு மயங்கி நிற்கும் நிலை; தாய்க்கு அடுத்தபடியாகச் சான்றோர் அருள் உள்ளம் வாய்ந்தவர், அவராலும் மன்னிக்க முடியாத குற்றம் ஆகும் கள்ளுண்டல் என்பது கருத்து. 923



தி-17