பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

21

நீங்கள் முன்பக்கமாக வாராததேன் என்று வினவ, அன்னோர் “அங்கே, வழிமுழுவதும் மலர்களாலும் தளிர்களாலும் பரப்பப் பட்டிருந்தது. அவை ஏகேந்திரிய ஜீவன்கள். நாங்கள் ஏகேந்திரிய ஜீவனையும் ஹிம்சை செய்யாதிருக்கும் ஒழுக்கம் உடையவர் அல்லோம் எனினும், இன்று பருவம் ஆகையாலும் உபவாச விரதத்தையுடையராய் இருக்கின்றமையாலும் அவ்வழிவரின் ஏகேந்திரிய ஜீவ ஹிம்சை உண்டாகும் என்று கருதினோம்” என்றனர். பரதசக்கரவர்த்தி, இவர்கள் அணு விரததாரிகள் என்று கருதி, இவர்கட்கு ஒன்று முதலாகப் பதினொரு சூத்திரம் ஈறாக யக்நோபவிதம் இட்டுச் சன்மானம் பண்ணி ஆரிய ஷட்கர்மங்களை உபதேசித்தான். (அணுவிரதமாவது “பெரிய கொலை பொய் களவொடு காமம், பொருளை வரைதலோடைந்து” என்ற அருங்கலச் செப்பால் உணரலாம்). ஆரியஷட் கருமமாவது,

“ஒதலே ஒதுவித்தல் உடன் வேட்டல் வேட்பித்திட்டல்*
ஈதலே யேற்றலாறு மேற்கும் அந்தணர் தொழிற்பேர்”

எனச் சூடாமணி நிகண்டால் அறியலாகும்.

இங்ஙனம் சிராவண சுத்த பூரணையில் சிரவண நட்சத்திரம் கூடிய நாளில் பிராமணர்களை உண்டாக்கினார் என்பது போதரும். எனவே எல்லாச் சீவன்களிடத்திலேயும் அன்பும் அருளும் பூண்டு, கொல்லாமை முதலிய தர்மங்களைக் கடைப்பிடிக்கும் ஒழுக்க முடையவர்களே அந்தணர் என்பவர் ஆவர் என்பதும், இத்தகைய பண்புகள் படைத்தவர்களே ஜைந சமயக் கோட்பாட்டின்படி அந்தணர் என்று அழைக்கப்படுவர் என்பதும் அறியப்படும்.

பொருட்பால் - (55) செங்கோன்மை என்னும் அதிகாரம் மூன்றாவது குறள் (543)

“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்”


  • வேட்டல் - ஓமம் செய்தல்; வேட்பித்தல் - ஓமம் செய்வித்தல் (வேட்டல்,

யாகம் செய்தலன்று.)