பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

467

1138. நிறையரியர் மன்னளிய ரென்னாது காம

மறையிறந்து மன்று படும்

என்பது, காவல் மிக்குக் காமம் பெருகிய போது சொல்லியது:

இவர் நிறை[1] யால் நாம் மிஞ்சி நடத்தற்கரியர் என்று பயப்படாமல் மிக அளிக்கத்தக்கார் என்று எண்ணாமல், மகளிர் காமமும் மறைத்தலைக் கடந்து வெளிப்படுவதாயிற்று என்றவாறு.

காமத்தை எப்படி மறைத்தாலும் வெளிப்படு மென்பதாம்.

1139. அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம

மறுகின் மறுகு மருண்டு

என்பது, இதுவுமது

நான் முன் அடங்கியிருந்த படியினாலே எல்லாரு மென்னை அறியார்கள்; இனி அப்படி நில்லாமல் நானே வெளிப்பட்டு அறிவிப்பேன் என்று நினைத்தால், என்காமம் இவ்வூர் மறுகின்[2] கண் மயங்கிச் சுழலாநின்றது என்றவாறு.

மயங்குதல், அம்பலாதல்; மறுகுதல், அலராதல் என்பதாம்

1140. யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா வாறு

என்பது, செவிலி[3]க்கு அறத்தொடு நின்று வைத்து, யான் நிற்கிறது எப்படி என்று நகைத்த தோழியொடு வாடித்தன்னுள்ளே சொல்லியது:

அறிவில்லாதவர் நான் கேட்கிறது மல்லாமல் கண்ணாலே காணுமாறும் என்னை நகையா நின்றார்; அதே னெனில் யான் அனுபவிக்கிற காம நோயைத் தாமும் அனுபவிக்க வில்லை யென்று தலைவி வருந்தினாள் என்றவாறு


  1. நிறை-மனவடக்கம்
  2. மறுகு வீதி
  3. செவிலி - தலைமகளை வளர்த்ததாய்