பக்கம்:திருக்குறள் உரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் உடல்நோயிலும் வறுமையிலும் இழிதொழில்செய்து உயிர்வாழ்வதற்குக் காரணம் முன்பு உயிர்களை உடலினின்றும் பிரிக்கும் கொலைத் தொழில் செய்தமையே காரணமாகும். அதாவது.இம்மையிற்கொலை செய்வோர்மறுமையில் வறுமை, பிணி முதலியவற்றிற்கு ஆளாவாள் என்பது கருத்து. 330, 34. நிலையாமை உலகில் தோன்றி வாழும் உயிர்கள் நிலையாக உலகில் வாழ்வதில்லை.இயற்கையினாலோ, அல்லது இயற்கைக்குப் புறம்பான வழியிலோ உயிர்கள் இவ்வுலக வாழ்க்கையினின்று நீங்குதல் இயற்கையின் பாற்பட்ட நியதி. இந்த நியதியை உலகு தோன்றிய நாள் தொடங்கி வெற்றி கொண்டு வாழ்ந்தாரில்லை.வாழலாம் என்ற நம்பிக்கை தோன்றி வளர்ந்து வருவது உண்மை. ஆயினும் வாழ்க்கையின் பயனாக உருப் பெறவில்லை. அப்படியே வெற்றி பெற்றாலும் மாற்றமேயின்றி வாழ்தல் அரிது. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் மாற்றத்தைக் கூட நிலையாமை என்று கூறுதல் தவறில்லை. இங்ங்ணம் நிலையாமையை எடுத்துரைத்தல் துன்புற்று அழுதலுக்கன்று.விரைந்து தொழிற்பட்டு வாழ்க்கையின் பயனை முழுமையாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தைத் துாண்டுவதற்காகவே என்பதறிக. ஆனால் இதுவரையில் நடைமுறையில் நடந்திருப்பது நிலையாமையை எண்ணி வறிதே வாழ்ந்து வறுமையை வளர்த்ததேயாகும். 331. நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும் புல்லறி வாண்மை கடை நில்லாதனவற்றை நிலையின என்று கருதி வாழ்தல் அறியாமையில் அறியாமையாம். நில்லாதனவற்றை நிலையாயின என்று கருதிப் பயன்கொள்ளாது வறிதே வாழ்தல் அறியாமை என்றார். 331. 332. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந்தற்று. ஒருவனுக்குப் பெருஞ்செல்வம் சேர்வதும் அச்செல்வம் இல்லாமற் போதலும் ஓர் ஆடலரங்கில் காண்போர் கூட்டம் கூடுவதும் கலைவதும் போன்றதே. ஓர் ஆடலரங்கில் காட்சி காட்டப்படும்போதுமக்கள் கூடுவர். காட்சி முடிந்தவுடன் கலைந்து சென்றுவிடுவர். இங்குக் கூடுதலும் பயன் நோக்கியதேயாம், 96 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை