பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சான்றாண்மை

11


சொல் “சிறந்த” என்ற பொருள்களிலேயே கையாளப் பெற்றிருக்கின்றது. இவ்வுண்மையை “தகை சான்ற சொல்”, “உரை சான்ற நூல்”, “வாய் சான்ற பொருள்” என்ற சொற்களால் நன்கறியலாம்.

சான்றாண்மைக்குத் தமிழகம் தந்த பெருமை மிகப் பெரியதாகும், “தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாதே” -என்பது அறிஞர் நல்லாதனார் கொடுத்த அடி “நல்ல மகனாய்ப் பிறந்தும் சும்மா திரியாதே; சான்றோன் எனத்திரி” என்பது ஒளவையின் வாக்கு. “ஆண்டு பலவாகியும் என் தலையில் ஏன் நரையில்லை தெரியுமா? நான் வாழும் ஊரில் சான்றோர் பலர் வாழ் கின்றனர்” என்பது புறநானூறு காட்டும் புதுமை. பெருமையில் அடங்காதவை பலசான்றாண்மையில் அடங்கியிருக்கின்றன என்பது வள்ளுவர்பெருமான்கருத்து.

பிற நூல்களைக் காட்டிலுந் திருக்குறளில் சான்றாண்மைக்கு உயர்ந்த இடம் கொடுக்கப் பெற்றிருக்கிறது. இது வள்ளுவரது உள்ளத்தில் சான்றாண்மை பெற்றிருந்த தனி இடத்தையே நமக்கு அறிவிக்கிறது. திருக்குறளில் 100 ஆம் அதிகாரமாகப் பண்புடைமை கூறப்பெற்றிருக்கிறது. இது “முழு மனிதன் நூறாண்டு வாழ்வான்:முழு மனிதன் பண்போடு வாழ்வான்” என்று கூறுவதுபோல இருக்கிறது. இதற்கு முன்னே 99 ஆம் அதிகாரமாகச் சான்றாண்மை கூறப் பெற்றிருக்கிறது. இது சான்றாண்மை இன்றேல் மனிதப் பண்பே இல்லையென்று கூறுவதுபோல இருக்கிறது. அதுவும் 90, 91,92, 93, 94, ஆம் அதிகாரங்களில் பெரியாரைப் பிழையாதே; பெண் வழி மயங்காதே; பொருட் பெண்டிர்த் தழுவாதே; கள்ளை உண்ணாதே; சூதை விரும்பாதே என அறிவுறுத்தி, 96 ல் குடிப்பெருமை எடுத்துக்காட்டி 97, 98ல் மானத்தையும், பெருமையையுங் கூறிப் பிறகு 99ல் சான்றாண்மையை விளக்குஞ் சிறப்பு எண்ணி மகிழக் கூடியதாகும்.