பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

திருக்குறள் கட்டுரைகள்


மகிழக் கூடியிருக்கும் கலைஞர்களின் கூட்டத்தை மட்டும். பெருஞ் செல்வத்திற்கு உவமையாகக் காட்டியிருப்பது அவரது கலையுள்ளத்தையே நமக்குக் காட்டுவதாக இருக்கிறது

எப்படி நாடகக் கொட்டகைக்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து, பின் பெருங்கூடட்டமாகக் காணப்படுகிறார்களோ, அப்படியே ஒருவனுக்கு செல்வமும் சிறிது சிறிதாக வந்து பின் பெருஞ்செல்வமாகத் திரண்டு காட்சியளிக்கும் என்ற கருத்தையும் இக் குறளிற் கண்டு மகிழுங்கள்.

நாடகத்திற்கு வரும்போது தனித்தனியாக வந்த மக்கள் நாடகம் முடிந்த பிறகு ஒன்றுசேர்ந்து ஒரேயடியாய் போய் விடுவதைப் போல, வருங்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் வந்த செல்வம், போகுங்காலத்தில் ஒரேயடியாய்ப் போய் விடும் என்ற உண்மையையும், இக்குறள் வெகு அருமையாக விளக்கிக் கொண்டிருக்கிறது.

நாடகக் கொட்டைக்கு மக்கள் வரும்போது ஒரு வழியில் மட்டுமே வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடுவது போலச் செல்வமும் வரும்போது ஒரு வழியில் வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடும் என்ற கருத்தையும் இக்குறள் அழுத்தமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.

செல்வம் வரும்போது மகிழ்வும், போகும்போது சோர்வும் ஒருவனுக்கு எப்படி உண்டாகும்? என்பதைக் காட்ட, நாடகத்தைக் காணவரும் மக்களிடம் வரும் போது காணப்படும் மகிழ்வையும், போகும்போது காணப்படும் சோர்வையும் உவமையாகக் காட்டியிருப்பது பெரிதும் நயமுடையதாகக் காணப்படுகிறது.

‘நாடகத்தை முன் வைத்து மக்கள் கூடுவதும் பிறகு கலைவதும்போல, ஒருவனது செயலை முன்வைத்து செல்வம் சேர்வதும் பிறகு அழிவதும் ஏற்படும்’ என்ற கருத்தும் இக்குறளிற் புதைந்து காணப்படுகிறது.