பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

திருக்குறள் கட்டுரைகள்


குளத்தில் உள்ள நீர் உயர உயர, அதில் உள்ள கொடிப் பூக்களும் உயர்ந்து காணப்படுவதுபோல, மக்களின் ஊக்கம் உயர உயர, அவர்களது வாழ்வும் உயர்ந்து காணப்பெறும்.

தீமை தம்மை நெருங்கி வந்தாலும், அழிவு தம்மை அடைய வந்தாலும், துன்பம் தம்மைத் தாக்கவந்தாலும், ஊக்கமுள்ள மக்கள் ஒருபோதும் தளர்ச்சியடைவதில்லை. உடல் முழுவதும் அம்புகளால் தாக்கப்பட்ட போதிலும் கூட, யானையானது பெருமித நடைபோடுவதில் தவறுவதில்லை.

மக்கள் என்போர் ஊக்கமுடையவர் அஃதில்லாதவர் ‘மக்கள்’ ஆகார், மக்களுக்கும் மரப்பொம்மைகளுக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு ஊக்கம் உள்ளவர்க்கும் அற்றவர்க்கும் உண்டு.

ஊக்கமுள்ள மக்கள் நல்லதை, உயர்வை, பெரியதை எண்ணி, அவைகளை அடைய முயற்சிப்பர். ஒருக்கால் தோல்வி அடையினும், அவற்றைப் பெற மீண்டும் மீண்டும் முயற்சிப்பர்.

பகைவன் அதிக வலிமையுடையவனாயினும், மிகப் பெரியவனாயினும், ஊக்கமுள்ளவனைக் கண்டால் அஞ்சியே தீர்வான் அதிக வலிமையும் பெருமித நடையும் உள்ள யானையும், ஊக்கமுள்ள புவியின் தாக்குதலால் நிலை குலைந்துவிடும்.

“மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள்” என்று பெருமை கொள்ளும் சிறப்பு ஊக்கமில்லாதவர்க்கு இல்லை. இவை வள்ளுவரது கருத்துக்கள்,

உள்ளத்தில் ஊக்கமில்லாதவர்க்குச் சுற்றுப்புறச் சூழ்நிலை நன்கு அமைந்திருந்தாலும், வாய்ப்பும் வசதியும் மிகுந்திருந்தாலும் பயனில்லை. வாழ்வில் ஒளி தோன்ற