பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 24?

கடைசியில் வாழைத் தண்டை உரித்தெடுத்து விட்டால்; வெள்ளித் தண்டே என்னும்படி நேர்மையொழுங்கில் எவ்வளவு சிறந்து காட்சியளிக் கின்றது:

இந்த நேர்மையை வேறு எந்த மரத்தில் நாம் காண முடியும்? இயற்கையான வாழைத் தண்டை வைத்துக் கொண்டு நேர்க்கோடுகள் போடலாம்.

வாழை இங்ங்னமெல்லாம் - வளைவு ஒழுங்கு, அடுக்கு ஒழுங்கு, வரிசையொழுங்குகளோடு நேர்மையொழுங்கிலும் மேம்பட்டு, அறத்திறமென்னும் ஒழுங்கு முறையில் தன்னிகரற்று விளங்குகின்றது.

ஒரு பேரறிவின் பதிவு வாழையின் பொருள்களில் பதிந்திருந்தாலல் லாமல்; இத்தனை யொழுங்குகளை அதனிடத்திற் காண முடியுமா? அந்தப் பேரறிவு எது? அதனை நன்றியறிதலுடன் நினைவு கூர்தல் எவ்வளவு இன்றியமையாதது!

சிறந்த மரங்களெனப்படும் வாழை, மா, பலா என்னும் முக்கனி மரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் ஏனை இரண்டும் இவ் வொழுங்குத் திறத்தில் வாழை போல்வன அல்ல?

பட்டைகளோ, கிளை களோ, இலைகளோ, காய்களோ எவையும் இவ் வொழுங்கில் எழுவதில்லை.

பலாப் பழம் மேலெல்லாம் முள்ளிருப்பதோடு - அவையும் வரிசைப்பட இல்லை. சில பலாப் பழங்கள் ஒரு பகுதி ஒடுங்கியும் ஒரு பகுதி பருத்துங்கூட இருக்கும். முள்ளோடு பிசினும் உடையது.

வாழையின் காய்களிலோ - பழங்களிலோ இத்தகைய முடக்குகளை, இடர்களைக் காண்பதரிது.

முக்கனி மரங்களில் பலாவைவிட மாவும், மாவைவிட வாழையும் சிறந்தன.

வேறு மர வகைகளிலும் செடி வகைகளிலும் இவ்வொழுங்கு முறைகளிற் சிற்சில ஏறக்குறையவாவது காணப்பட்டாலும், வாழையின் ஒழுங்குமுறை அத்தனையும் நிறைவாகக் காண்பது கடினம்.

அப்படியே, பொதுவாக மக்கள் வாழும் இடங்களில், இல்லங்களில் சென்று பார்த்தால் அவர்கள் பேரறிஞர்களாக இருந்தால்கூட, அவர்கள் தெருக்கள், இல்ல வரிசைகள், இல்லத்திற்குப் புழங்கு பொருள்கள், புத்தகங்கள் முதலியன பெரும்பாலும் ஒழுங்காக இருப்பதில்லை.

அறவொழுங்கு அவர்களிடையே வீறு பெறவில்லை. யாரோ சான்றோர் சிலரிடம் அரிதில் அதனைக் காண முடிகிறது. மனிதரில் ஞானிகள் இருப்பது போல, மரங்களில் ஞான மரம் வாழை.

இனி, வாழை மரத்தில் வீட்டுத் தன்மை அமைந்திருப்பது எண்ணுந்தோறும் வியப்பினை விளைக்கின்றது.