பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 243

'பொருளெல்லாம் வேளாண்மை செய்தற் பொருட்டு என்பதில் வரும் எல்லாம் என்னும் எஞ்சாமைக் குறிப்புக்கு வாழையைத் தவிர வேறு எடுத்துக்காட்டு ஏது?

வீட்டுணர்ச்சி என்பது, பற்று முற்றும் அற்ற உணர்ச்சியாதலின், வீட்டுணர்வு உடையாரே, பயன்படும் உணர்வு முற்றும் உடையவர்.

பயன்படுதலே வீட்டு நிலை.

வாழையின் பொருளெல்லாம் வேளாண்மையில், அதாவது பயன்படுதலில் சற்றும் இழுக்கில்லாதவை,

அடியிலுள்ள வேர்க் கிழங்கு, வாழைப்பட்டை, நார், வாழைத் தண்டு, வாழை இலை, சருகு, பூ, காய், கனி முதலிய அனைத்தும் தலைசிறந்த நிலைகளிற் பயன்படுகின்றன. பட்டையின் சாறுகூட மருந்துக்குப் பயன்படுகிறது. வாழையில் பயன்படாத பொருள் எதுவுமில்லை. முற்றிலும் பயன்பட்டு வாழை இங்ங்ணம் முற்றிலும் வீட்டுணர்ச்சி மிக்கிருக்கின்றது. இதனால், வாடாத மங்கலமுடையதாய், நிலைத்த இல்லறப் புகழும், அந் நிலையே பேராத இயற்கையுமுடையதாய்ச் சென்றே புகுங்கதி யின்றித் தான் நின்று புகழும் பெற்றுச் சிறந்து, அடியார் மரமாய் வாழை வீடு பேறுடையதாகின்றது.

வீட்டுணர்ச்சி வாழையிற் காணப்படுவதுபோல் வேறு எங்கும் எதனிடத்தும் காணப்படுவதில்லை.

இவ்வாற்றால், வாழ்வதென்பது வாழை ஒன்றே! வாழ் என்னும் முதனிலையிலிருந்து வாழை என்னும் அழகிய பெயரை வேறு எது பெற்றிருக்கிறது?

வாழ்வது வாழை என்பதனாலன்றோ, குலை தள்ளிய வாழை மரங்களை, வாழும் வகைக்குத் திருமணங் கூட்டும் இல்வாழ்க்கை மன விழாக்களிலும், திருவருள் கூட்டும் ஞான வாழ்க்கைக் கடவுள் விழாக்களிலும் மங்கலமாக நிறுத்தி அணி செய்விக்கும் மரபு தமிழ்நாட்டில் எங்கும் காணப்படுகின்றது.

எனவே, அற மரம், ஞான மரம் வாழை மரம் அந்த வாழ்க்கை தியாக வாழ்க்கை. திருக்குறள் வாழ்வியல்படி மக்கள் நடந்தால், நாமும் தியாக வாழ்க்கை வாழ முடியும். அதற்குச் சான்று வாழை மரம்!

திருக்குறள் பீடம், குருகுலம் அழகரடிகள்