பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 225

உலகமே சிந்திக்கத் திரானியற்றுக் காலச் சிதைவுக்கு ஆட்பட்டுக் கலங்கிக் கிடந்த நேரத்தில் - யாதும் ஊரே - யாவரும் கேளிர் என்ற ஒருலகச் சமுதாயத் தத்துவத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் வாயிலாகக், கொஞ்சு தமிழால் உலகுக்கு விளக்கிக் கொண்டிருந்த இனம் - தமிழினம்.

காலக் கரையான்களால் அழிக்கப்படாத அந்தத் தமிழ் இனத்திலே தான், பரன்பரை பரம்பரையாகத் தமிழ்மேதைகள் தோன்றித் தெள்ளு தமிழை வளர்ப்பதற்காகச் சீரியத் தொண்டாற்றி வந்தார்கள்

நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்கு மேல் நின்ற தமிழ் நிலவாய், ஞானச் செந்தாமரை எழிலையும் தோற்கடிக்கும் திருக்குறள் தோற்றமாய், தமிழ்ப் பண்பாட்டிற்குத் தடம் புரளா அறிவூட்டும் சிந்தனையாளர்களாகத் திகழ்ந்து, அவர்களிலே ஒருவராக இன்றும் நிலைத்து நிற்பவர்தான் திருவள்ளுவர் பெம்மான்.

நெசவுத் தொழிலைச் செய்து கொண்டே, அவர் வாழ்க்கையையும் நெய்து வந்தார் மனித வாழ்க்கை, தறியின் பாவைவிட மிக வேகமாக ஓடுவதையும் கண்டார்.

அதனால்தான், வாழ்க்கையை நெய்ய ஆரம்பித்தார். இல்லையென்றால், உண்மையைப் பெய்ய ஆரம்பித்தார் என்று காலம் அவரைக் கணிக்கின்றது.

திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31- என்று தமிழகப் புலவர் குழு வரம்பு கட்டியுள்ளது. அதாவது இன்றைக்கு 2036-ஆம் ஆண்டுக் காலக் கட்டத்திலே அவர் வாழ்ந்ததாகக் கால வட்டம் அறிவிக்கின்றது.

தமிழ்ப் பெரும் புலவர், ஆராய்ச்சி வித்தகரான ஞா. தேவநேயப் பாவணர் அவர்கள், திருவள்ளுவர் காலத்தை கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்து, திருக்குறளுக்கு மரபுரையும் எழுதியுள்ளார்.

எனவே, திருவள்ளுவர் வாழ்ந்தபோது, இயேசு நாதர் என்ற மழையே பெய்யவில்லை. அதனால், கிறித்துவம் முளைவிடாத நேரம். இசுலாம். என்ற புல் பூண்டுகள் அரேபியப் பாலைவனச் சோலையிலே அரும்பாத காலம். அத்தகைய கால வட்டம் வள்ளுவப் பெருந்தகை வாழ்ந்த காலக் கட்டம்.

யூதம், கன்பூசியிசம், பார்சியம் போன்ற மதநெறிகள் வள்ளுவர் காலத்துக்குச் சிறிது முற்பட்டவை. என்றாலும், அவை தமிழ்நாட்டில் காற்சுவடுகளைப் பதித்தில.

சைவம், வைணவம், வைதீகம், பெளத்தம், சமணம் மதக் கொள்கைகள் அப்போது பரவியிருந்தாலும், தமிழ்நாட்டில் தற்காலம் போல் அவை பரவியிராத சூழ்நிலை.

எனவே, திருவள்ளுவர் முதன் முதலாக எழுத முற்பட்டபோது, அவருடைய எழுத்தின் கழுத்தின் மேல் மதங்களின் கூரிய வாட்கள் விழ