பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 திருக்குறள் சொற்பொருள் சுரபி

நமது திருக்குறள், எல்லோருக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒருவருக்கே அது உரிமையாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சைவத்தின் கருத்து, வைணவத்தின் கருத்து, சமணத்தின் கருத்து, பெளத்தத்தின் கருத்து, இசுலாமியத்தின் கருத்து, கிறித்தவர்களின் கருத்து, திருக்குறளிலே இருக்கின்றதா என்று பார்த்து கொள்ளலாமே தவிர, ஒவ்வொரு மதத்திற்கும் அது சொந்தம் என்று கூறும் துணிவுடையோர் இன்னும் பிறக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

ஏனென்றால், திருவள்ளுவரது சிந்தனை, கருத்து வண்ணங்கள் இதுவரையில் ஆய்வு நிறக் கலையிலே தேர்ந்தவனுக்கே தடுமாற்றத்தைத் தருகின்றது.

திருக்குறள் என்பது ஒரு வண்ண ஜாலம்! நாத மர்மம்! கருத்துச் சூழல்! சிந்தனை மயக்கம்! அறிவின் சோதனை தேர்வு பெற முடியாத தேர்தல் குறி பார்த்தடிக்க முடியாத குறி!

விஞ்ஞான ஆய்வுக்கே ஏற்பட்ட பெரலட்டிக் - அதாவது பாரிச வாய்வு:

மேலும், ஒரு படி தாண்டிச் சொல்லப் போனால், மனிதன் உரை எழுதித் தெளிவு பெற வேண்டிய நூலல்ல - திருக்குறள்.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவன் இனி பிறந்தால் பரவாயில்லை என்று நினைக்கின்றேன்! ஏனென்றால், உரைகள் கலவரத்தில் முடிகின்ற காரணத்தை வைத்து.

அய்யன் திருவள்ளுவருக்குப் பின் வந்த ஆராய்ச்சி நூல்கள், பொருள் விசாரணை நூல்கள், மனோதத்துவ நூல்கள், விஞ்ஞான நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த ஒருவன்கூட - திருக்குறளுக்கு நேரிடையாகப் பொருள் கூற முடியவில்லையே - ஏன்?

ஏனென்றால், தமிழுக்கு உயிர் நூல்களை எழுதிய, தன்னேரிலா அறிவு அரிமாக்கள் அனைவரும், சூத்திர வடிவில், யாப்பு செய்யுள் வடிவில், நுட்பம் செறிந்த செஞ் சொற்களைப் பெய்து, மந்திரம் - மறை போன்ற பொருளாட்சிகளைப் புதையல் போல் வைத்துள்ளார்கள்.

திருவள்ளுவம் என்றால் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். உங்களது எல்லையிலே இருந்து அது வராமல், உலக எல்லையிலே இருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

எனவே, மனிதன் என்பவன், எந்த நூலை எழுதினாலும், படித்தாலும், கேட்டாலும், மாசிலா மனமுடையவனாக இருந்தால்தான், எதை அவன் கேட்கிறானோ, அதன் உண்மைப் பொருளைக் காண முடியும்.

இவ்வாறான மறை பொருட்கள் திருக்குறளிலும் உண்டு: