பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் தமிழகத்தின் முதல் புரட்சியாளர்

உலக மக்கள் உயர்ந்த நெறியில் வாழ்ந்து இன்பம் பெறுவதற்காக வழி வகைகளை வகுத்துக் கூறியவர் திருவள்ளுவர். அவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் அவரை என்றும் போற்றிப் புகழக் கடமைப்பட்டுள்ளனர். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் பெற்றுள்ளோம் அன்றோ!

கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் பிற மொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். திருவள்ளுவர், அயல் மக்கள் செல்வாக்கால் தமிழ்ப் பண்பாடு அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். தமிழ் மக்களின் பழைய பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாதவைகளையும் களைந்தெளிய அறிவுரை கூறியுள்ளார்.

புரட்சி என்பது மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூட நம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போர் முழக்கம் செய்து மாற்றி அமைக்க முயல்வதே ஆகும். பழமையைப் புரட்டி விட்டு அகற்றிவிட்டு, புதுமையைப் புகுத்துவதுதான் புரட்சி. புரட்சி என்றால் பூசலும் போரும், கொள்ளையும், கொலையும் தோன்றுமென்று கருதலாம். மேல்நாடுகளில் அவ்வாறுதான் புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால், திருவள்ளுவர் செய்துள்ளது எண்ணப் புரட்சியாகும். எண்ணமே செயலின் அடிப்படை யாகும். அதனால் செயலின் தாய், எண்ணம் என்பர் மேனாட்டார்.

எண்ணம் திண்ணியதாக உருவானால் செயல் தானே தோன்றிவிடும். எண்ணம் தோன்றுமிடம் மனம். அம்மனம் தூய்மையாக இருக்க வேண்டுமென்று திருவள்ளுவர் கூறுவதே ஒரு புரட்சியாகும். மனம் தூய்மையாக இருத்தலே அறம் என்கின்றார். மனம் தூய்மையற்று என்ன நற்செயல்கள் செய்தாலும் அவை பயன்படா. வெறும் ஆர்ப்பரவ வேட்கைக்கு உரியனவாகி விடும். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்; ஆகுல்நீர பிற என்பன நோக்குமின்.

எவ் வகையிலும் சாதியாலோ நிறத்தாலோ பொருளாலோ, வேறுபாடு அற்று வாழ்ந்த தமிழ் மக்களிடையே சாதி வேறுபாடுகள் புகத்