பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 திருக்குறள் சொற்பொருள் சுரபி

தொடங்கின. அச் சாதி வேறுபாடுகள் இன்றும் அகன்றுவிட வில்லை. மிக்களை அலைக்கழித்து வருகின்றன. வள்ளுவர் அன்றே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்.

தமிழ்நாட்டில் இரக்கத்திற் சிறந்து அருள் உளம் கொண்டு மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் தொண்டாற்று கின்றவர்களை அந்தணர் என்று அழைத்து வந்தனர். அவர்களே மக்களில் தலைவர்களாகவும் மதிக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் தம்மைப் பிறப்பான் உயர்ந்தவராகக் கூறிக் கொண்டு அந்தணர் என்றும், ஐயர் என்றும் அழைத்துக் கொண்டனர். ஆனால், செயலில் வன்கண்மை பூண்டு தம் கூட்டத்தினர் அல்லாதவரை ஒடுக்கியும், இழித்தும் விலங்கினும் கீழாக நடத்தி வந்தனர். அதனால் வள்ளுவர் அந்தணர் யார் என்று விளக்கம் கொடுத்துப் போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழி கோலினார். அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் என்று.முழக்கம் விடுத்துள்ளமை காண்க

பிறப்பால் உயர்வு தாழ்வு பேசுதல் பேதமை. ஒழுக்கத்தால் உயர்ந்தோரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார். ஒழுக்கக் கேடர்களே இழிந்த பிறப்பினர் ஆவார்கள். ஆதலின் ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்று இடித்துரைத்தார். ஒழுக்கத்தால் உயர்வு படுத்தும் நெறி வெற்றி பெற்றிருக்கு மேல், இன்று நாட்டில் பூசல்கள் தோன்றுமா? ஒழுக்கம் உடையாரை ஒதுக்கிப் புறக்கணிப்பதனால் அன்றோ இன்று எங்கு நோக்கினும் பூசற் களமாகக் காண்ப்படுகின்றது. மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமென்றால் ஒழுக்கமுடையோர் உயர்ந்தோராக கருதப்பட்டு உயர்வாகப் போற்றப்படுதல் வேண்டும்.

மக்களில் கல்விப் பேறு அடைதற்குரியவர் சிலரே என்றனர். சில நாடுகளில் படிப்பவர் வேறு; உழைப்பவர் வேறு என்று வகைப்படுத்தினர். உயர்ந்தோரே படித்தல் வேண்டும். உழைப்பவர் படித்தல் வேண்டாம் என்றும் விதியாக்கினர். ஆனால் வள்ளுவர் கூறியது என்ன? கல்வி அனைவர்க்கும் பொது, கண்கள் அனைவர்க்கும் இயல்பாக உரியன: அதுபோலக் கல்வியும் எல்லார்க்கும் உரியதாகும். கண்களோடு பிறத்தல் போலக் கல்வியோடு வளர்தல் வேண்டும் . கண்ணில்லாது வாழ முடியாதது போல கல்வியில்லாதும் வாழ முடியாது. கல்வி பெறாதிருத்தல் பெருங்குற்றம். பெற முடியாது தடுத்தல் அதனினும் பெருங்குற்றம். கல்வியைப் பறிப்பது கண்ணைப் பறிப்பது போலாகும் என்று கல்வி, கல்லாமை என்னும் இயல்களில் தெறிவுறக் கூறியுள்ளார். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ் விரண்டும் கண்ணென்ப வாழுமுயிர்க்கு என்று கூறுவதில் ஒரு புரட்சியையும் செய்துள்ளார். கல்வி என்றால் வெறும் காப்பியங்களை மட்டுமோ இலக்கண நூல்களை மட்டுமோ கற்றல் அன்று அறிவியலை (எண்)யும் கலை (எழுத்து)களையும் ஒருவர் கற்றால்தான் முழுமைக் கல்வியாகும் என்கிறார்.