பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி 7

  எல்லாமே போகட்டும், இந்தியா விடுதலை பெற்ற பின்பு, தமிழ் நாடு அரசு பல துறைகளில் பல கலைச் சொற்றொகைகளைத் தக்காரைக் கொண்டு வெளியிட்டது.
  குறிப்பாகக் கூட்டுறவு சட்டம், புள்ளி விவரவியல், வருவாய் புள்ளியியல், வேளாண்மை போன்ற துறைகளுக் குரியச் சிறப்புச் சொற்கள் துணையகராதி வெளியிட்ட நேரத்தில், திருக்குறளும் தமிழ் வளர்ச்சி தானே, அதற்குரிய அகராதி ஒன்றை அரசு சார்பாக, தொண்டாக எண்ணி வெளியிட்டிருக்கலாம் இல்லையா? செய்ததா தமிழ்நாடு அரசு?
  வி.டி. பண்டிதர், மத்தியாசு, வேலாயுதம், கீ. இராமலிங்கனார். கோ. முத்துப் பிள்ளை போன்ற தனிப்பட்ட அறிஞர்கள், தாவரவியல், கணிதவியல், பொதுவியல், ஆட்சி சொல்லியல் போன்ற துறைக்கேற்ற கலைச் சொற்களையெல்லாம் திரட்டி அவரவர் செயலாண்மைக்கேற்ப செய்து தொண்டாற்றிய மனங்கள், திருக்குறள் அகராதி ஒன்றை உருவாக்குவோமே என்று பாடுபட அவர்களுக்கு முயற்சி ஏனெழவில்லை? 
  பழமொழிகளைத் தொகுத்தப் பலர், சில அகராதிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், பெர்சிவல் பாதிரியார், இலாசரஸ், அனவரதநாயகம் பிள்ளை, நீலாம்பிகை அம்மையார், கோலார் பேராசிரியர் பெருமாள், திருமதி செயா மீனாட்சி சுந்தரம் போன்றவர்களாவர். இவர்களுள் யாராவது ஒருவர் திருக்குறள் அகராதியைத் தொகுத்திருக்கலாம் இல்லையா? செய்யவில்லையே!
  இவ்வளவு ஏன்? எதிர்ச் சொற்களுக்கென ஒரு அகராதி, அடுக்கு மொழிக்கென அகராதி, ஐம்பொறிகளுக்கான அகராதி, தெய்வங்களுக்குரிய அடைமொழி அகராதி, சிலேடை அகராதி, மக்கட் பெயர் அகராதி, இல்லப் பெயர் அகராதி, முசுலிம் பெயர்கள் அகராதி, இந்து மக்கள் பெயர் அகராதி போன்ற அகராதிகளை எல்லாம் தொகுத்து வெளியிட்ட தமிழ் மகானுபவர்கள்; தமிழ் மறையான திருக்குறளுக்கென ஒரு சொற்பொருள் அகராதியைத் தொகுத்து வெளியிட ஊக்க உணர்வு இல்லையே! என்ன காரணமோ! 
  இவை எல்லாவற்றையும் ஊடுருவி பார்த்த பின்புதான் நமது கண்களுக்கும், உணர்வுகளுக்கும் மேதை வீரமாமுனிவர் தென்படுகிறார். அந்த மாமனிதர், தமிழ் மண்ணிலே பிறக்காதவர், தாய்மொழியாக, தமிழை ஏற்க முடியாதவர், 1886-ஆம் ஆண்டில் திருக்குறளுக்காகத் தனி அகராதியையும், சொற்குறிப்பு அகராதியையும் தொகுத்தளித்தார் - தமிழ் இனத்தின் பெருமைக்கு!
  வீரமாமுனிவருக்குப் பிறகு நமக்கு அடையாளமாகக் காட்சி தருபவர் திரு. மார்க்க சகாயம் செட்டியார் என்பவர். இவர், 1924-ஆம் ஆண்டில், திருக்குறள் என்ற பொய்யா மொழிக்கு, 'திருக்குறள் சொற்குறிப்பு அகராதி' என்ற நூலை இயற்றித் தமிழ்மறைக்குத் தொண்டாற்றினார்.
  இவருக்குப்பின், திருக்குறள் சொல்லடைவு எனும் ஒரு முழுமையான நூலை எழுதினார். அது சரி, சொல்லடைவு என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?