பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள்

        ஆள்வினை உடைமை (முயற்சி) 

அரிய காரியம் என்று மலைக்க வேண்டாம்;
முயற்சி எல்லாப் பெருமையும் தரும்.                 611
எடுத்த வினையை அரைகுறையின்றிச் செய்க: 
கடமையை விட்டாரை உலகம் விட்டு விடும்.         612 
பிறர்க்கு உதவும் பெருமித எண்ணம்  
உழைக்கின்ற பெரும்பண்பால் உண்டாகும்.          613 
உழைப்பில்லாதவன் யார்க்கும் உதவ முடியுமா? 
பேடி பகைவர்முன் வாள் வீச முடியுமா?              614 
இன்பம் நாடாது காரிய முடிவை நாடுபவன் 
சுற்றத்தின் துன்பம் தாங்கும் தூணாவான்.           615 
உழைப்பு செல்வ நிலையை உண்டாக்கும்: 
உழையாமை வறுமையைத் தந்துவிடும்.             616 
சோம்பேறியின் மடியில் இருப்பாள் மூதேவி, 
உழைப்பவன் அடியில் இருப்பாள் சீதேவி.            617 
உடல் ஊனம் யார்க்கும் பழியில்லை; 
அறிவை வளர்த்து முயலாமையே பழி.               618 
தெய்வத்தால் ஒரு செயல் முடியாது போகினும் 
முயன்றால் அதற்குரிய கூலி உண்டு.                619 
சோர்வின்றிக்காலம் தாழ்க்காது உழைப்பவர் 
மாறான விதியும் ஓடக் காண்பர்.                    620
                        126


அரசியல் அதிகாரம் 62

              ஆள்வினை உடைமை 
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.                            611 
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.                       612 
தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே 
வேளாண்மை என்னுஞ் செருக்கு                     613 
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை 
வாளாண்மை போலக் கெடும்.                      614 
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் 
துன்பம் துட்ைத்தூன்றும் துண்.                     615
முயற்சி திருவினை யாக்கும் 
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.              616
மடியுளான் மாமுகடி_என்ப மடியிலான் 
தாளுளாள் தாம்ரையி னாள்.                        617 
பொறியின்மை யார்க்கும் பழியன்று 
அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.               618 
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்.                           619 
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர்.                              620 
                           127