பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


288 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: ஒருவன் தன்னை மறந்தாயினும் பிறனுக்குக் கேடு செய்யக் கருதாமல் இருப்பானாக. அவன் கேடு செய்யக் கருதினால் கருதிய அவனுக்குக் கேடு செய்ய அறம் கருதும். புதிய உரை: தனக்கு எதிராக உள்ள மனம் வேறுபட்ட பகைவருக்கு, அழிவும் இழிவும் ஏற்படுகிற கெடுதிகளைச் செய்யற்க. அப்படிச் செய்தால் செய்பவரின் ஒழுக்கம், இருதய ஞானம் அழிய, அவரைச் சார்ந்த வரவுகளும் பல இழிவுகளுக்கும் கேடுகளுக்கும் ஆளாக நேரிடும். விளக்கம்: மறந்தும் என்னும் சொல்லுக்கு மறதி என்றே பொருள் கொண்டிருக்கின்றனர். மறந்தும் என்பதற்குப் பொல்லாங்கு, மறல், மறவி, என்ற பொருட்களும் உண்டு. மறல் என்றால் எழுச்சி, பிணக்கு; மறவி என்றால் ஈனம். ஆக, அசட்டையாக, பகை காரணமாக, பிணக்கு ஏற்பட்டதன் காரணமாக, மனம் வேறுபட்டதால், அவருக்குக் கெடுதல் நிகழ்த்த வேண்டும் என்று விரும்புவது மனித சுபாவம். அப்படிச் செய்வது ஈனம் என்கிறார். அவ்வாறு, பிறனுக்குக் கேடு செய்ய எண்ணுகிற போது, எண்ணுபவரின் ஒழுக்கத்திற்கு இழுக்கம் ஏற்படுகிறது. செயல்பட முனைகிறபோது அவரது ஞானம் ஊனமடைகிறது. ஈனம் அடைகிறது. அவர் நோற்ற ஒழுக்க நோன்பும், செய்த புண்ணியம் எல்லாமே மண்ணாகிப் போகிறது. அது மட்டுமன்று; அவர் இழைத்த கேடுகளும், கொடுமைகளும் செய்தவரை மட்டும் பாதிக்காமல், அவரைச் சார்ந்தவர்களையும், உற்ற உறவுகளையும் சிதைத்து அழித்து விடுகிறது. ஒருவரால் ஒரு குடும்பம் மட்டுமன்று, உறவும் கிளையும் உலைந்து குலைந்து போக வேண்டுமா? வேண்டாமே! அதனால்தான் மறந்தும் என்னும் வார்த்தையை வைத்தார். ஏதோ மறதி காரணமாக, ஒருவர் கேடு செய்ய முடியாது. ஏற்படுகிற பிணக்கு, மனமாறுபாடு, பகை, இழிந்த குணத்தின் எழுச்சி, சுற்றி வளைக்கும் சூழ்ச்சி போன்றவற்றால் தான் கேடுகளைச் செய்ய முடியும் என்று, மனதின் வேரூன்றிய வெறுப்புகளைக் குறிப்பிட்டு, அதனை நீக்கும் வழிவகையாக,