பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொல்லும் சொல்!

15

கொல்லாமையும் சொல்லாமையும் பிறருக்கன்றித் தனக்கும் நல்லது என்ற கருத்தும் இக்குறளில் அடங்கியே இருக்கிறது.

உயிரைக் கொல்லாமை, தீமையைச் சொல்லாமை ஆகிய இரண்டையும் 'நலத்தது' என்று ஒரு சொல்லால் ஒற்றுமைப் படுத்திய வள்ளுவர், அவற்றின் பண்பை வேற்றுமைப் படுத்திக் கூறி இருப்பது எண்ணி எண்ணி வியக்கக்கூடிய ஒன்று.

கொல்லா நலத்தினை 'நோன்மை' என்றும், தீமை சொல்லா நலத்தினை 'சால்பு' என்றும் வள்ளுவர் வகுத்துக் காட்டுகிறார். இக்குறளில் அமைந்துள்ள இச்சொற்கள் பொன்னிற் பதித்த மணிகள் என மின்னிக் கொண்டிருக்கின்றன.

நோன்பு என்பதை 'விரதம்' என வடமொழியாளர் கூறுவர். அது 'குறிப்பிட்ட சில நாட்களில் இதை நான் செய்வதில்லை' என்பதும், 'நான் விரும்புவதைப் பெறும் வரையில் இவ்வாறு இருப்பேன்' என்பதும் ஆகும். புரட்டாசிச் சனிக்கிழமைகளில் மட்டும் புலால் உண்பதில்லை என்பதும், திருப்பதிக்குப் போகும்வரை முடி எடுப்பதில்லை என்பதும் நோன்பு என்பதின்பாற்படும்.

ஆனால் 'சால்பு' என்பது குறித்த நாளில் குறிப்பிட்ட ஒன்றைச் செய்யாதிருக்கும் நோன்பினைச் சுட்டாது. அது என்றும் நின்று நிலவி, இயல்பாகவே அமைந்திருக்கின்ற ஓர் உயர்ந்த பண்பையே சுட்டிக்காட்டுவதாகும்.

நோன்பின் தன்மையையும் , சால்பின் தன்மையையும் அறிந்துகொண்ட நமக்கு, இக்குறள் நோன்பைவிடச் சால்பு உயர்ந்தது என்று வற்புறுத்துவதாகத் தெரிகிறது.

நோன்பைவிடச் சால்பு உயர்ந்தது என்று இக்குறள் கூறுவதிலிருந்து, உயிர்களைக் கொல்லாதிருப்பதை விடத் தீமைகளைச் சொல்லாதிருப்பதுதான் உயர்வு என்பது வள்ளுவர் கருத்து என விளங்குகிறது.