பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடம்பை

35

மையாலும், முட்டை அழிந்துபடுவதாலும் ‘குடம்பை’ என்பது முட்டையையே குறிக்கும் எனக் கருத இடம் ஏற்படுகிறது.

‘புட்பறந்தற்றே’ என்ற சொற்றொடரை நோக்கும் போது, முட்டையை விட்டு வெளிவந்த எதுவும் உடனே பறப்பதில்லை; ஆதலின், கூண்டு என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.

கூண்டை விட்டுப் பறந்த பறவை மீண்டும் கூண்டுக்குள் வந்து புகுவதாலும், கூண்டு பறவையோடு உடன் பிறந்த தல்ல ஆதலாலும், உடலை விட்டுப் பிரிந்த உயிர் மீண்டும் அவ் உடலில் வந்து புகாமைபோல, முட்டையை விட்டு வெளிவந்த எதுவும், மீண்டும் முட்டைக்குள் சென்று புகுவதில்லை ஆதலாலும், முட்டை என்று பொருள் கொள்வதே நலம் எனத் தோற்றுகிறது.

முட்டையைவிட்டு வெளிவரும் எதுவும் ‘குஞ்சு’ என்றே பெயர் பெறுவதாலும், கூண்டைவிட்டுப் பறந்து செல்வதே புள் எனப்படும் ஆதலாலும், இக்குறளில் உள்ள ‘குடம்பை’ என்ற சொல் கூண்டையே குறிக்கும் எனக் கூறவேண்டியிருக்கிறது.

கூண்டா? முட்டையா? என்ற ஐயப்பாட்டில் மேலும் இறங்காமல், குடம்பை என்ற சொல்லுக்கு “கூடு” என்று பொருள் கூறுவதே நலமாக விருக்கும். எவ்விதமெனில், அது பறவையின் கூட்டிற்கும், முட்டையின் கூடுக்கும், மக்களின் உடலுக்கும் ஏற்ற ஒரு சொல் என்பதனாலேயாம்.

என்றோ ஒரு நாளில், எப்போதோ ஒரு பொழுதில் கூடு விட்டுப் புள் வெளிப்பட்டு விடுதல்போல, உடலைவிட்டு உயிர் ஓடிப் போய்விடும் என்று எச்சரிக்கை செய்கிறது இக் குறள்.

ஒன்றாகத் தோன்றி, ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக மகிழ்ந்து, ஒன்றாக வருந்தி, ஒன்றாக அழிகின்ற உடலுயிரின் இத்தகைய உயர்ந்த நட்பே நிலைத்து நில்லாது என்றால், வேறு எவருடைய நட்பு நிலைத்திருக்கப் போகிறது?